முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பைரவிக்கு முன்பே ரஜினி நாயகனாக நடித்தப் படம் எது தெரியுமா?

பைரவிக்கு முன்பே ரஜினி நாயகனாக நடித்தப் படம் எது தெரியுமா?

ரஜினி

ரஜினி

படத்தின் அறிமுகக் காட்சியிலேயே ரஜினி சிகரெட்டை ஸ்டைலாக  புகைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1975 இல் அபூர்வ ராகங்கள் படத்தில் சின்ன வேடத்தில் நடித்து, சினிமாவில் அறிமுகமான ரஜினி 1978 இல் பைரவி படத்தில் முதல்முறையாக நாயகனாக நடித்தார். கலைஞானம் தயாரித்த அந்தப் படத்தை, எம்.பாஸ்கர் இயக்கினார். ஆனால், பைரவிக்கு முன்பே ரஜினி ஒரு படத்தில் நாயகனாக நடித்தார் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

பாலசந்தர் இயக்கத்தில் கமல், சுமித்ரா, சரத்பாபு, ஷோபா நடித்த நிழல் நிஜமாகிறது 1978 மார்ச் மாதம் வெளியானது. ஷோபா இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். படத்தின் டைட்டிலை ஷோபாவின் அழகான கருப்பு வெள்ளை புகைப்படத்தால் பாலசந்தர் நிறைத்திருப்பார். இந்தப் படம் மலையாளத்தில் வெளியான அடிமகள் (அடிமைகள்) படத்தின் தமிழ் தழுவல். பாலசந்தர் இதனை தமிழில் எடுக்கும் முன்பு தெலுங்கில் சிலக்கம்மா செப்பிண்டி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். எரங்கி சர்மா இயக்கிய இந்தப் படம்தான் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த முதல் படம். இதில் அவருடன் சங்கீதா, ஸ்ரீப்ரியா, லக்ஷ்மிகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

சிலக்கம்மா செப்பண்டி படத்தின் அறிமுகக் காட்சியிலேயே ரஜினி சிகரெட்டை ஸ்டைலாக  புகைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். கமல் முதலில் நாயகனானது மலையாள கன்னியகுமரி திரைப்படத்தில். அதுபோல் ரஜினியை நாயகனாக்கியது தெலுங்கு திரையுலகம். சிலக்கம்மா செப்பண்டி 1977 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியானது. இதற்குப் பிறகே அடிமகள் படத்தை பாலசந்தர் தமிழில் ரீமேக் செய்தார்.

ரஜினி தெலுங்கில் நாயகனான பிறகு பத்து மாதங்கள் கழித்து 1978 ஜுன் 8 ஆம் தேதியே பைரவி திரைக்கு வந்தது. ஆக, ரஜினி நாயகனாக நடித்த முதல் படம் பைரவி அல்ல, நாயகனாக தமிழில் நடித்த முதல் படமே பைரவி.

மலையாள அடிமகள் படம் பம்மன் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. கே.எஸ்.சேதுமாதவன் இந்தப் படத்தை இயக்கினார். அன்றைய மலையாள சூப்பர் ஸ்டார் சத்யன் பிரதான வேடத்தில் நடிக்க, ஷீலா நாயகியாகவும், சாரதா ஷோபா நடித்த வேடத்திலும் நடித்திருந்தனர். பொட்டன் என்ற அப்பாவி வேடத்தில் பிரேம் நசீர் நடித்திருந்தார். அன்று வந்த மலையாளப் படங்களில் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற படங்களில் ஒன்றாக அடிமகள் அமைந்தது. அதன் ரீமேக்கில் இரண்டு ஸ்டார்கள் நடித்தனர் என்பது ஆச்சரியமான விஷயம். அடிமகள் படத்தின் கதையை எழுதிய பம்மன் அந்தக் காலத்தில் மென்பாலியல் கதைகள் எழுதும் எழுத்தாளராக மதிக்கப்பட்டார். அடிமகள் உள்பட அவரது சில நாவல்கள் திரைப்படமாகி விருதுகள் வென்ற பிறகும் அவரது பெயரில் படிந்த பாலியல் எழுத்தாளர் தூசி போகவில்லை. அதனால், பம்மன் என்ற தனது புனைப்பெயரை பொதுவெளியில் சொல்வதையே அவர் தவிர்த்து வந்தார் என்பது முக்கிய செய்தி.

1978 மார்ச் 24 வெளியான நிழல் நிஜமாகிறது இன்று 45 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema, Rajinikanth