முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இருந்தால் இயக்குநர் பக்கம் நிற்பேன் - மோகன் ஜி உறுதி

கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இருந்தால் இயக்குநர் பக்கம் நிற்பேன் - மோகன் ஜி உறுதி

இயக்குநர் மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி

கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இருந்தால் இயக்குநர் பக்கம் நிற்பேன் என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படம் முழுக்கவே ஒரு பெண்ணைப் சுற்றி அமைந்திருக்கிறது என்பது வருத்தமாக உள்ளது என்று இயக்குநர் மோகன் ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேளிக்கை பொருட்காட்சி துவக்க விழா இன்று நடைபெற்றது. கேளிக்கை பொருட்காட்சி துவக்க விழாவில் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கலந்துகொண்டு பொருட்காட்சி நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மோகன் ஜி, ’கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலே ஒரு புனைவுதான். அவருடைய கற்பனை கலந்த புனைவு அதைத் தாண்டி இந்த படத்தில் நிறைய புனைவுகள் இருக்கிறது என்று தான் சொல்லி இருந்தேன். உடனே நான் பொன்னியின் செல்வன் படம் பிடிக்கவில்லை. நான் அதை எதிர்த்து பேசியதாக நிறைய செய்திகள் நேற்று வந்தது பார்த்தேன்.

அப்படி இல்லை. வரலாறு சம்பந்தமாக நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும் போது அதை தப்பாக காட்டும்போது ஒரு வருத்தம் வருகிறது. படத்தில் ஆதித்த கரிகாலனை தான் நிறைய இடத்தில் காட்டியிருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் நந்தினி எனும் கதாபாத்திரம் படத்தில் வரும். அத்தனை அரசர்களையும் சுலபமாக நந்தினி கவர்ந்து விடுகிறார்கள் என்கின்ற விஷயம் வரலாறாக பார்க்கும்போது ஏதோ ஒரு விஷயம் மக்களுக்கு தப்பாக போய் சேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லிவிட்டு ஒன்று இரண்டு கெட்ட விஷயங்களை சொன்னார்கள் என்றால் தெரியாது. படம் முழுக்கவே ஒரு பெண்ணை சுற்றி படம் அமைந்திருக்கிறது என்பது வருத்தமாக உள்ளது.

இதைத் தாண்டி சோழர்கள் உடைய வாழ்க்கை முறை, வீரம் அவர்களுடைய கலாச்சாரம், அவர்களுடைய போர் முறை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்கலாம். அந்தப் படம் இன்னும் பெரிதாக கொண்டாடப்பட்டு தில்லானா மோகனாம்பாள் மாதிரியான வரிசையில் இடம் பெற்றிருக்கும் என்பதுதான் என் கருத்து.

Also read... அயோத்தி பட நடிகையுடன் இணையும் நடிகர் கவின்? - வெளியான புதிய அப்டேட்

சோழர்கள் பெருமையையும் பொன்னியின் செல்வர் பெருமையையும் படத்தில் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அது இல்லை என்பதால் வருத்தம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோகன் ஜி, ‘கேரளா ஸ்டோரி படம் பார்க்கவில்லை. டிரைலர் மட்டும்தான் பார்த்தேன். அதை விமர்சனம் சொல்வது தப்பு. அதைத் தாண்டி சென்சார் செய்யப்பட்ட படத்தை நீதிமன்றம் தடை செய்ய மாட்டார்கள். படத்தை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு தான் உண்டு. படம் பார்த்துவிட்டு அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று விவாதம் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

அதைத் தாண்டி எல்லா மதத்தில் இருக்கிற தப்பைச் சொல்லலாமே தவிர மொத்தமாக ஒரு மதத்தை இப்படித்தான் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கேரளா ஸ்டோரி அப்படி இருந்தால் நானும் எதிர்ப்பேன். நடந்த விஷயங்களை தரவுகளுடன் சொல்லி இருந்தால் அதை எடுத்த இயக்குனர், தயாரிப்பாளர் பக்கம் நிற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: சந்திரசேகர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Ponniyin selvan