முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 85 வருடங்களுக்கு முன் 4 முறை படமாக்கப்பட்ட தக்ஷனின் கதை!

85 வருடங்களுக்கு முன் 4 முறை படமாக்கப்பட்ட தக்ஷனின் கதை!

தக்ஷயக்ஞம்

தக்ஷயக்ஞம்

இந்த புராண கதையை தழுவி 1920 இல் சதி பார்வதி என்ற பெயரில் மௌனப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் 1922 இல் சதி என்ற பெயரில் இதே கதையை மறுபடியும் மௌனப்படாக எடுத்தது. அதன் பிறகும் ஒருமுறை இக்கதை படமாக்கப்பட்டது. சினிமா பேசத் தொடங்கிய பின் 1938 இல் மீண்டும் அதே கதையை தக்ஷயக்ஞம் என்ற பெயரில் படமாக்கினர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

தக்ஷன் ஒரு புராண கதாபாத்திரம். இவனது மகள் சதி. சிவன் மீது கொண்ட காதலால் தனது தந்தை தக்ஷனின் விருப்பத்தை மீறி அவரை திருமணம் செய்து கொள்வாள். தனது மருமகன் சிவனை அவமதிக்கும் பொருட்டு யாகம் ஒன்றுக்கு தக்ஷன் ஏற்பாடு செய்வான். அந்த யாகத்திற்கு சிவன் தவிர்த்த மற்ற அனைத்து கடவுள்களையும் அழைப்பான். சிவனுக்கு அழைப்பு இல்லை. இதனால் சதி மனம் கசந்து போவாள். எனினும் தந்தை நடத்துகிற யாகம் அல்லவா, அழையா விருந்தாளியாக யாகத்துக்கு செல்வாள்.

சதியின் காதல் திருமணத்தால் கடுப்பில் இருந்த தக்ஷன், யாகத்துக்கு வந்த தனது மகளை அனைவர் முன்னிலையிலும் வைத்து அவமதித்து விடுவான். இதனால் துக்கமும், அவமானமும் கொள்ளும் சதி, அந்த யாகத்தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்வாள். தகவல் சிவலோகத்தை எட்டியதும் சிவன் கோபம் கொண்டு வீரபத்ரனை அனுப்பி யாகத்தை நிறுத்துவார். தக்ஷனின் தலையை வெட்டி அதில் ஆட்டுத்தலையை பொருத்துவார். பிறகு இறந்து போன சதியின் உடலை எடுத்துவந்து, அதன் முன் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பிப்பார். ருத்ரதாண்டவம் என்பது ஊழி நடனம். அதை ஆட ஆரம்பித்தால் ஈரேழு உலகமும் அழிந்துவிடும். சிவனின் பிரத்யேக ஆயுதம் அந்த நடனம்.

உலகில் உள்ள மற்ற கடவுள்கள் சிவனிடம் வந்து ருத்ரதாண்டவத்தை நிறுத்தும்படி கேட்பார்கள். தொடங்கியதை எப்படி உடனே நிறுத்துவது? சிவன் தொடர்ந்து நடனமாட, விஷ்ணு தனது சக்கராயுதத்தால் சதியின் உடலை துண்டு துண்டாக்கி இந்தியாவின் பல பகுதிகளில் விழச் செய்வார்.

இந்த புராண கதையை தழுவி 1920 இல் சதி பார்வதி என்ற பெயரில் மௌனப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் 1922 இல் சதி என்ற பெயரில் இதே கதையை மறுபடியும் மௌனப்படமாக எடுத்தது. அதன் பிறகும் ஒருமுறை இக்கதை படமாக்கப்பட்டது. சினிமா பேசத் தொடங்கிய பின் 1938 இல் மீண்டும் அதே கதையை தக்ஷயக்ஞம் என்ற பெயரில் படமாக்கினர். இதனை ராஜா சந்திரசேகர் எழுதி இயக்க, மெட்ரோ பாலிடன் பிக்சர்ஸ் தயாரித்தது. இதில் சிவனாக பிரதான வேடத்தில் வி.ஏ.செல்லப்பா நடித்தார். விஷ்ணுவாக சின்ன வேடம் ஒன்றில் எம்ஜி ராமச்சந்திரன் தோன்றினார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எம்.ராதாபாய், எம்.ஜி.நடராஜ பிள்ளை உள்பட பலர் நடித்தனர். படத்தில் மொத்தம் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

மௌனப்படக் காலத்தில் 3 முறையும், சினிமா பேசத் தொடங்கிய பின் பலமுறையும் தக்ஷனின் கதை படமாக்கப்பட்டது. 1938 வெளிவந்த தக்ஷயக்ஞம் 1941 இல் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. பிறகு 1962 இல் மறுபடியும் தெலுங்கில் படமாக்கப்பட்டது. 1980 இல் வங்க மொழியிலும் இதனை ரீமேக் செய்தனர்.

இப்படி பலமுறை படமாக்கப்பட்ட தக்ஷயக்ஞம் சரியாக 85 வருடங்களுக்கு முன் 1938 மார்ச் 31 இதே நாளில் வெளியானது. மக்கள் விரும்புகிற சுவாரஸியமான கதையாக இருந்தும், தக்ஷயக்ஞம் வெளியான போது போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema