சென்னையில் மிகப்பெரிய படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சி.ஐ.ஐ அமைப்பின் நிர்வாகிகள் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் சுகாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
CII என அழைக்கப்படும் Confederation of Indian Industry அமைப்பு தென்னிந்திய சினிமா வளர்ச்சிக்கான கருத்தரங்கை நடத்தி வருகிறது. இதற்கான முதல் கருத்தரங்கு கடந்த ஆண்டு சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதேபோல இந்த ஆண்டு வருகிற 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் சி.ஐ.ஐ அமைப்பின் நிர்வாகிகள் சத்யஜோதி தியாகராஜன், சுகாசினி மணிரத்னம், அம்மா கிரியேஷன் சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் இந்த ஆண்டு நடைபெறும் கருத்தரங்கில் சினிமா வளர்ச்சிக்கான பல்வேறு விஷயங்களை விவாதிக்க உள்ளதாக தெரிவித்தனர். முக்கியமாக தென்னிந்திய சினிமாக்களின் உலகளாவிய தாக்கம், சிறிய பட்ஜெட் திரைப்படங்கள், ஓ.டி.டி வளர்ச்சி, திரையரங்கு மற்றும் சினிமா, பெண் சக்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 19 மற்றும் 20-ம் தேதிகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
அதில் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் மணிரத்னம், சேகர் கபூர், வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், சுதா கொங்கரா, நடிகர்கள் கார்த்தி சிவகுமார், சிரஞ்சீவி, கதையாசிரியர் விஜேயேந்திர பிரசாத், ஆஸ்கார் விருது வென்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் உள்ளிட்ட பல திறமையாளர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர் என தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற சி.ஐ.ஐ கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் கூறினர். குறிப்பாக கடந்த ஆண்டு விவாதிக்கப்பட்டதில் பல கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்ததாகவும், அதை அரசு நிறைவேற்றி தருவதாக உறுதியளித்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கியமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய சினிமாக்களின் தாய் வீடாக சென்னை இருந்தது. ஆனால் இந்த நிலை தற்போது மாறிவிட்டது,
அந்த பழைய நிலையை மீண்டும் சென்னையில் கொண்டு வருவதற்காக படப்பிடிப்பு தளம் அமைக்க கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
அத்துடன் தங்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவற்றை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார் எனவும் தெரிவித்தனர். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்றும், அதை அரசு முறைப்படி அறிவிக்கும் என்றும் சி.ஐ.ஐ அமைப்பின் நிர்வாகியான சத்யஜோதி தியாகராஜன் மற்றும் சுகாசினி தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.