கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் திண்டுக்கல் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளியாகவில்லை. சென்ற வார படங்கள் மட்டுமில்லை, கடந்த சில வருடங்களாக தமிழில் வெளியான மினிமம், மீடியம் பட்ஜெட் படங்களின் நிலை இதுதான்.
திரையரங்கு உரிமையாளர்களிடம், ஏனிந்த பாரபட்சம் என்று கேட்டால், அந்தப் படங்களுக்கு பத்து பேர்கூட வருவதில்லை, கரண்ட்பில்லுக்கே டிக்கெட் விற்காத நிலையில் நாங்கள் எப்படி அந்தப் படங்களை திரையிடுவது என்று கேட்கிறார்கள். அவர்களது கேள்வியிலும் நியாயம் உள்ளது. மினிமம் பட்ஜெட் படங்கள் பத்துக்கும் குறைவான பார்வையாளர்களால் காட்சிகள் ரத்தாவது தொடர்கதையாகி வருகிறது. அதேநேரம், ஆங்கிலப் படங்கள் சிறு நகரங்களிலும் வெளியாகின்றன. சென்ற வாரம் வெளியான ஜான் விக் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் தமிழ்நாட்டில் வெளியாகியுள்ளது. மினிமம் பட்ஜெட் தமிழ்ப் படங்கள் ஓரங்கட்டப்பட்ட சிறு நகரங்களிலும் இந்தப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். பார்வையாளர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
இந்த ஹாலிவுட் மோகம் தொன்றுதொட்டே இருந்து வந்திருக்கிறது. நாற்பதுகளில் தமிழில் புகழ்பெற்றிருந்த குழந்தை நட்சத்திரத்தை, ஹாலிவுட்டின் அன்றைய நம்பர் ஒன் குழந்தை நட்சத்திரத்தின் பெயரில் பாராட்டி கொண்டாடியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
முப்பதுகளில் கே.சுப்பிரமணியம் கதாசிரியர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்து றை வித்தகராகத் திகழ்ந்தார். இவர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை. ஆரம்பகால தமிழ் சினிமாவை வடிவமைத்தவர்களில் ஒருவர். இவரது தம்பி கே.விஸ்வநாதனும் பல படங்களை தனது சித்ரா டாக்கீஸ் சார்பில் தயாரித்துள்ளார். முக்கியமாக அவரது அண்ணன் இயக்கிய படங்கள். இவர் நடிகை வத்சலாவை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஒரே குழந்தை, சரோஜா ராமாமிர்தம். கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் 1937 இல் வெளியான பாலயோகினி படத்தில் இவர் பேபி சரோஜா என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு ஆறு வயது. அந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் வியந்து பாராட்டப்பட ஒரே படத்தில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து தியாக பூமி (1939), காமதேனு (1941) ஆகிய படங்களில் நடித்தார். ஒருசில படங்களிலேயே அவரது புகழ் பல மொழிகளில் பரவியது. அவரை அன்றைய ஹாலிவுட்டின் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான ஷெர்லி டெம்பிளுடன் ஒப்பிட்டு, இந்தியாவின் ஷெர்லி டெம்பிள் என்று புகழ்ந்தனர்.
காமதேனு படத்தின் கதை, வசனத்தை கே.சுப்பிரமணியம் எழுத, அவரது தம்பி கே.விஸ்வநாதன் ஹீரோவாகவும், அவரது மனைவி வத்சலா ஹீரோயினாகவும் நடித்தனர். அவர்களின் மகள் பேபி சரோஜா முக்கிய வேடத்தில் தோன்றினார். அண்ணன் கதை, வசனத்தை எழுத, தம்பியின் ஒட்டு மொத்த குடும்பம் நடித்தது. ஆக, அன்றைய காலகட்டத்தில் 100 சதவீத குடும்பப் படமானது காமதேனு. நந்தலால் ஜஸ்வந்த்லால் படத்தை இயக்கினார். இவர் பிரபல இந்திப் பட இயக்குனர். இவர் இயக்கிய ஒரே தமிழ்ப் படம் இதுதான்.
காமதேனுவில் மொத்தம் 18 பாடல்கள் இடம்பெற்றன. பாபநாசம் சகோதரர்களான பாபநாசம் சிவன் பாபநாசம் ராஜகோபால ஐயர் மேற்பார்வையில் ராஜேஷ்வர ராவ், கல்யாணராமன் படத்திற்கு இசையமைத்தனர். பாபநாசம் சகோதரர்கள் பாடல்கள் எழுதினர். படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
1941 மார்ச் 27 வெளியான காமதேனு தற்போது 82 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema