முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இதுதான் கருணாநிதி.. நகைச்சுவை படத்தை வசனத்தில் மெறுகேற்றி அரசியல் படமாக்கிய சம்பவம்!

இதுதான் கருணாநிதி.. நகைச்சுவை படத்தை வசனத்தில் மெறுகேற்றி அரசியல் படமாக்கிய சம்பவம்!

அவன் பித்தனா

அவன் பித்தனா

படத்தை விமர்சித்த கல்கி பத்திரிகை, அரசியலுக்கும், சமூகத்துக்கும் அறிவுரை வழங்கும் கருத்தோவியமாகத் திகழ்கிறது இப்படம். அதற்கேற்ப உரைநடையும் எடுப்பாக அமைந்திருக்கிறது என்று எழுதியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முல்லப்புடி வெங்கட ரமணா எழுதிய கதையை அதுர்த்தி சுப்பாராவ் 1964 இல் டாகுடு மூத்தடு என்ற பெயரில் இயக்கினார். என்.டி.ராமராவ் நடித்த இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. 1966 இல் இதனை அவன் பித்தனா? என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். ரீமேக்கின் திரைக்கதை, வசனத்தை எழுதும் பொறுப்பு கலைஞர் மு.கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது எழுத்தில் தெலுங்கின் நகைச்சுவைப் படம் சமூக விமர்சனத்தை முன்வைத்த அரசியல் படமானது.

நல்லையா ஒரு கோடீஸ்வரர். அவரது மகன் கலப்புத் திருமணம் செய்து கொள்ள, நல்லையா அவனை வீட்டைவிட்டு துரத்திவிடுவார். மகனும் அவனது மனைவியும் இறந்து போக, நல்ல உள்ளம் கொண்ட ஒரு டீக்கடைக்காரர் அனாதையான அவர்களது மகனை எடுத்து வளர்ப்பார். நல்லையா மனம் மாறி மகனைத் தேடி வருகையில் மகனும், மருமகளும் இறந்துபோயிருக்க, பேரன் எங்கிருக்கிறான் என்பதே தெரியாமல் போய்விடும். அந்தக் கவலையே அவரை நோயில் தள்ளிவிடும். பேரனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்பதே அவரது ஒரே விருப்பமாக இருக்கும். அனாதையான பேரனை டீக்கடைக்காரர் குமார் என பெயரிட்டு, தனது மகனைப் போல வளர்ப்பார்.

குமார் இப்போது வாலிபன். அவன்தான் இப்போது கடையை நடத்துவது. தொழிலாளர்கள் காசு இல்லாமல் சாப்பிட்டாலும் கண்டு கொள்ளாத நல்ல உள்ளக்காரன். பசிக்கிறப்ப சாப்பிடு, காசிருக்கிறப்போ குடுத்திடு என்பதே அவன் பாலிசி. நாலைந்து பெண் குழந்தைகளைவேறு அவனது பராமரிப்பில் வளரும். அவர்களுடன் ஒருத்தியாக கோமதியும் வந்து சேர்ந்து கொள்வாள். அப்பாவின் பணத்தாசைக்காக கிழவனுக்கு மூன்றாம்தாரமாக கழுத்தை நீட்ட விருப்பமில்லாமல் அவள் ஓடி வந்திருப்பாள். அவளுக்கு நல்லையாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கிடைக்கும். நல்லையா எப்போது சாவார் சொத்தை எப்போடு ஆட்டையப் போடலாம் என்று சொந்தக்கார காக்கா கூட்டம் ஒன்றும் அவரது பங்களாவில் இருக்கும். குமாரின் வெளிப்படையான குணம் நல்லையாவுக்குப் பிடித்துப்போகும். ஒருகட்டத்தில் அவன்தான் தனது பேரன் என்பதை அறிந்து கொள்வார். நல்லையா பேரன் கிடைத்த மகிழ்ச்சியில் மண்டையைப் போட குமாரையும், கோமதியையும் பிரிக்க காக்கா கூட்டம் சதி செய்யும். கடைசியில் குமாரை பைத்தியக்காரன் என மனநலவிடுதியில் சேர்க்கும். பராசக்தி போல் கிளைமாக்ஸ் கோர்ட்டில் நடக்கும். அதுதான் படத்தின் ஹைலைட் காட்சி.

படம் வெளியானதற்கு அடுத்த வருடம் நடந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை வென்று முதல்முறை ஆட்சிக்கட்டிலில் ஏறியது. அதற்கு முன்பே படத்தின் நாயகன், குமாராக நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். வசனம் எழுதியவர் கருணாநிதி. அரசியல் பன்சுக்கு கேட்கவா வேண்டும். நல்ல உள்ளம் கொண்ட அந்த டீக்கடைக்காரரின் பெயர் அழகிரி. பட்டுக்கோட்டை அழகிரியை மனதில் வைத்து அந்தப் பெயரை கொடுத்திருந்தார். ரோஜா குறித்து பேச்சு வருகையில் நாயகன் சொல்வான், எனக்கு ரோஜா என்றாலே நினைவுக்கு வருவது நேருதான். இப்படி கிடைக்கிற சந்திலெல்லாம் அரசியல் சிந்து பாடியது அவன் பித்தனா.

கோமதியாக நடித்த சி.ஆர்.விஜயகுமாரி நாயகி. அவரை ஒருவன் சைட் அடிக்க, நாயகன் அவனை, என்னடா ஐப்பசி என்பார். என்ன ஐப்பசியா? ஆமா, ஐ ன்னா கண்ணு. உன் கண்ணுக்கு ரொம்ப பசிபோல... இப்படி வசனங்களில் விளையாடியிருப்பார். கிளைமாக்சில் நாயகனுக்கு எதிராக சாட்சி சொல்கிறவர்கள் அனைவரும் அவனால் பலனடைந்தவர்கள். பசிக்கிறப்ப சாப்பிடு, காசிருக்கிறப்ப கடனை அடைன்னு பைத்தியக்காரன்தானே சார் சொல்வான்... கோயில் உண்டியல்ல காசா கொட்டுவாங்க. பிச்சைக்காரங்க ஐயா அம்மான்னா அஞ்சு பைசா போட மாட்டாங்க. இந்தாளு நூறு ரூபா தந்தான்னா, அவன் பைத்தியம்தானே... மில்லுல வர்ற லாபத்துல சரிபாதி தொழிலாளர்கள் எங்களுக்கு தர்றதா சொன்னார். பைத்தியக்காரன்தானே அப்படி செய்வான்... இப்படி நாயகனின் நல்ல உள்ளமே பைத்தியக்காரத்தனமாகப் பார்க்கப்படும். நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்கிற கான்செப்ட்தான். அதனை தனது வசனத்தால் கருணாநிதி பிரித்து மேய்ந்திருப்பார். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இயல்பான காட்டாறு நடிப்பும், வசன உச்சரிப்பும் அருமை.

Also read... வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மரணம்.. திடீர் மரணத்துக்கு இதுதான் காரணமா?

பாலையா, நாகேஷ் என பல நடிகர்கள் இருந்தும் எஸ்.எஸ்.ஆர்.தான் திரையை முழுமையாக நிரப்பியிருப்பார். அதேபோல் விஜயகுமாரியும். இன்றைக்கு வரும் பல அரசியல் படங்களைவிட நுட்பமும், தெளிவும், நவீனமும் கொண்ட படைப்பு அவன் பித்தனா? ப.நீலகண்டன் அதனை சிறப்பாக இயக்கியிருந்தார். படத்தை விமர்சித்த கல்கி பத்திரிகை, அரசியலுக்கும், சமூகத்துக்கும் அறிவுரை வழங்கும் கருத்தோவியமாகத் திகழ்கிறது இப்படம். அதற்கேற்ப உரைநடையும் எடுப்பாக அமைந்திருக்கிறது என்று எழுதியது.

1966 ஏப்ரல் 29 வெளியான அவன் பித்தனா? இன்று 57 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema