எஸ்.பாலசந்தர் என்றும், வீணை பாலசந்தர் எனவும், வீணை எஸ்.பாலசந்தர் என்றும் குறிப்பிடப்படுகிற அனைவரும் ஒருவரே. வீணை வாசிப்பதில் வல்லவர் என்பதால் எஸ்.பாலசந்தரை வீணை பாலசந்தர் எனவும் அழைப்பர். சினிமாவில் நடிகர், இயக்குனராக இருந்தவர் அடிப்படையில் ஒரு இசை ரசிகர். கடைசிக்காலத்தில் சினிமா மீதான மோகத்தைவிட இசை மீதான விருப்பம் மேலோங்க, தன்னை வீணை பாலசந்தர் என்று அழைப்பதையே அவர் விரும்பினார். அதனால் பலரும் அவரை வீணை பாலசந்தர் என்றே அழைத்தனர்.
1927 இல் பிறந்த இவர் தனது 7 வது வயதில் சீதா கல்யாணம் படத்தில் இராவண சபையில் குழந்தை இசைக்கலைஞனாக நடித்தார். அதே படத்தில் இவரது அப்பா சுந்தரம் ஐயர் ஜனகனாகவும், மூத்த அண்ணன் எஸ்.ராஜம் ராமனாகவும், அக்கா எஸ்.ஜெயலட்சுமி சீதாவாகவும் நடித்தனர். முழுமையான சினிமாக் குடும்பத்தின் குடும்ப சினிமாவாக அது தயாரானது. அதன் பின் ருஸியசிருங்கர், ஆராய்ச்சிமணி படங்களிலும் நடித்தார். 1948 இல் தனது 21 வது வயதில் இது நிஜமா? படத்தை இயக்கினார்.
வீணை பாலசந்தர் என்கிற எஸ்.பாலசந்தர் இயக்கிய படங்கள் அனைத்தும் கதை ரீதியாகவும், காட்சிரீதியாகவும் வித்தியாசமானவை. தமிழில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டவர். இவர் 1958 இல் அவன் அமரன் படத்தை இயக்கினார். இடதுசாரி சிந்தனைகளை கொண்ட திரைப்படங்கள் அப்போது சுத்தமாகக் கிடையாது. அந்த நேரத்தில் மில் தொழிலாளிகளை மையப்படுத்தி அவன் அமரன் வெளியானது.
சந்தோஷம் மில் முதலாளி. அவரது மகள் லில்லியின் பள்ளித் தோழன் அருள். ஏழையான அருள் விபத்தில் கால் ஊனமான மரியம்மாளின் மகன். அதனாலேயே லில்லி - அருள் நட்பை சந்தோஷம் விரும்ப மாட்டார். வளர்ந்த பின் அவர்களின் நட்பு காதலாகும். அருள் வெளிநாடு சென்று பாரிஸ்டர் பட்டம் பயின்று சென்னை திரும்புவான். மகன் நீதிபதியாக வருவான் என்ற மரியம்மாளின் கனவை பொய்யாக்கி, மில் தொழிலாளிகளுக்காக தொழிற்சங்கம் அமைத்து அருள் போராடுவான். சந்தோஷம் அவனது வீட்டை தீக்கிரையாக்க அருளுக்கு தீக்காயம் ஏற்படும். இறுதியில் பாலத்தில் நின்று போராடும் தொழிலாளர்களை கொலை செய்ய சந்தோஷம் பாம் வைப்பார். அந்த சதியை அருள் முறியடிக்க, அவனை சுட்டுக் கொலை செய்வார்.
தொழிலாளர் பிரச்சனையை தொழிற்சங்கப் பின்னணியில் அணுகிய முதல் படம் அவன் அமரன் என சொல்லலாம். அதேபோல் படம்நெடுக இடதுசாரி கருத்துக்களை தூவியிருந்தனர். படத்தின் கதை, வசனத்தை எழுதியதுடன், படத்தை தயாரித்தவர் நாகர்கோயில் நாகராஜன். லல்லியாக ராஜசுலோசனாவும், மரியம்மாளாக கண்ணாம்பாவும் நடித்திருந்தனர். இடதுசாரி கருத்துக்களை படம் கொண்டிருந்ததால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்முறை படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் 72 இடங்களில் எடிட் செய்ய வேண்டும் என்றனர். அதாவது 72 வெட்டுகள். அவர்கள் சொன்னதையெல்லாம் நீக்கிவிட்டால் கதையே புரியாது என்பதால் ரிவைஸிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டது. அங்கு 72 வெட்டுகள் 52 ஆக குறைக்கப்பட்டன. அதுவும் அதிகம் என்பதால் தயாரிப்பாளர் வேறு வழிகளில் முயற்சியைத் தொடர்ந்தார். இறுதியில் படத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு திரையிட்டுக் காட்டினர். இடதுசாரி கொள்கையின்பால் ஈர்ப்பு கொண்ட அவர் படத்தை அனுமதிப்பார் என்ற நம்பிக்கை.
Also read... மலையாளத்தில் மோகன்லால்.. தமிழில் பாண்டியராஜன்.. ரசிகர்களை கவர்ந்த காமெடி படம்!
நேரு படத்தைப் பார்த்த பின் கட் செய்ய வேண்டிய எண்ணிக்கை 52 இல் இருந்து 35 ஆக குறைக்கப்பட்டு படம் திரைக்கு வந்தது. இந்த சிக்கலால் படம் வெளியாவது ஆறு மாதங்களுக்கு மேல் தள்ளிப் போனது. 1958 மே 23 படம் திரைக்கு வந்த போது படம் மீதான எதிர்பார்ப்புகள் குறைந்து, ரசிகர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே திரையரங்குகளுக்கு வந்தனர். படத்தில் 35 இடங்களில் காட்சிகள் நீக்கப்பட்டதும் படம் சுமாராகப் போனதற்கு காரணமாக அமைந்தது. இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் இடதுசாரியான நிமாய் கோஷ்.
1958 இல் அவன் அமரன் போன்ற ஒரு படத்தை எடுத்தது பாராட்ட வேண்டிய துணிச்சலான செயல். சென்சார் காரணமாக அந்த முயற்சியை ரசிகர்களால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் தோல்வியடைந்தது துரதிர்ஷ்டம். 1958 மே 23 வெளியான அவன் அமரன் தற்போது 65 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema