முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரசிகர்கள் போராடி இடம்பெற வைத்த இளையராஜா பாடல்

ரசிகர்கள் போராடி இடம்பெற வைத்த இளையராஜா பாடல்

இளையராஜா

இளையராஜா

இன்று இளையாஜா என்ற பெயர் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், முதல் படத்தில் அப்படியல்ல. சில பத்திரிகைகள் பின்னணி இசை சரியில்லை என எழுதின. பாடல்கள் பரவாயில்லை என்று ஒப்புக்கு பாராட்டின.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இளையராஜா முதன்முறை இசையமைத்த அன்னக்கிளி படத்தைப் பற்றியும், இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும் பலரும் பலமுறை, பேசி, எழுதி இருக்கிறார்கள். அன்னக்கிளி கதை ஆர்.செல்வராஜினுடையது. அவர் சொன்ன கிராமத்து மருத்துவச்சி கதை பஞ்சு அருணாசலத்துக்குப் பிடித்துவிட, அதற்கு திரைக்கதை, வசனம் எழுதினார். தேவராஜ் - மோகன் படத்தை இயக்கினார்கள்.

அன்னக்கிளி படத்தின் கதை நடப்பது அழகிய கிராமம். வயல்வெளி, தென்னந்தோப்புகள், ஓடைகள், பசுஞ்சோலைகள், மலைகள் என இயற்கை எழில்கொஞ்சும் இடம்.  இதற்காக பலநாள்  லொகேஷன் தேடி அலைந்தவர்கள் தேவராஜ், மோகன் மற்றும் பஞ்சு அருணாசலத்தின் தம்பி லட்சுமணன் ஆகியோர். அவர்களுக்கு வழிகாட்டி படத்தின் நாயகனான சிவகுமார். அவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்குத் தெரிந்த பவானி அணை, சத்தியமங்கலம், கராச்சிக்கொரை கிராமம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், செம்மேடு, மத்திபாளையம், ஆழியாறு, ஆனை மலை, வேட்டைக்காரன் புதூர் என பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். அனைத்துமே பச்சைப் பசுமையான பூமி. எனினும் முழுத்திருப்தி வரவில்லை.

இந்நிலையில் கலை இயக்குனர் பாபு தெங்குமரஹாடா கிராமம் குறித்துச் சொல்ல, காராச்சிக்கொரை கிராமத்திலிருந்து மலைப்பகுதியில் பல கிலோமீட்டர் உள்ஒதுங்கியிருந்த அந்த கிராமத்துக்குச் சென்றனர். அவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் அக்கிராமத்தில் இருக்க, அங்கேயே டேரா போட்டு கிளைமாக்ஸ் தவிர்த்து அனைத்துக் காட்சிகளையும் படமாக்கினர்.

தெங்குமரஹாடா நகரத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்ட மலைகளுக்கு நடுவில் இருக்கும் கிராமம். அங்கு ஹோட்டல் போன்ற எந்த வசதிகளும் இல்லை. கிராமத்தவர் ஒதுக்கித் தந்த வீடுகளில் நாயகன், நாயகி, இயக்குனர்கள் உள்பட அனைவரும் தங்கி வேலை செய்தனர். கிளைமாக்ஸை சென்னையில் படமாக்கினர்.

அன்னக்கிளியில் இளையராஜா இசையமைப்பது என்பதில் பஞ்சு அருணாசலம் உறுதியாக இருந்தார். அன்னக்கிளி பாடலை முதல்முறை ஒலிப்பதிவு செய்கையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாதாரண சினிமாக்காரராக பஞ்சு அருணாசலம் இருந்திருந்தால் அப்போதே இளையராஜாவுக்கு பேக்கப் சொல்லியிருப்பார். ஆனால், அவர் செய்யவில்லை. இரண்டாவதுமுறை சரியாக 'பிளக்' செய்யாததால் ஒலிப்பதிவு ஆகவில்லை. இந்த ஆரம்ப சென்டிமெண்ட் சறுக்கலைத் தாண்டியே அன்னக்கிளி படத்தின் பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. அப்போது இளையராஜா வெறும் ராசைய்யா என்கிற ராஜாதான். ஏவிஎம் ராஜன் ஏற்கனவே இருந்ததால்,  ராஜாவுக்கு முன் இளைய சேர்த்து அவரை இளையராஜாவாக்கினார் பஞ்சு அருணாசலம்.

அன்னக்கிளி ஆர்ட் படம் போல் இருக்கிறது என விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயங்கினர். புதிய விநியோகஸ்தர் ஒருவருக்கு குறைந்தத் தொகைக்கு படத்தை பஞ்சு அருணாசலம் கைமாற்றினார். முதலிரண்டு தினங்கள் படத்துக்குக் கூட்டமில்லை. அதற்குள் படம் குறித்து நேர்மறை விமர்சனங்கள் பேச்சுவாக்கில் பரவ, மூன்றாவது நாளில் படம் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல்லானது. பிறகு அன்னக்கிளியின் ஓட்டத்தை நிறுத்த முடியவில்லை. பல இடங்களில் வெள்ளிவிழா கண்டது.

Also read... சரோஜாதேவியை அறிமுகப்படுத்திய ஹொன்னப்ப பாகவதர்

அன்னக்கிளி வெளியான முதல்நாளே சொந்தமில்லை பந்தமில்லை பாடலை தியேட்டர்காரர்களே படத்திலிருந்து நீக்கினர். இடைவேளை முடிந்து இந்தப் பாடல் வரும். அது படத்தின் ஓட்டத்தை குறைப்பதாக இதனை செய்தனர். படத்தின் பாடல்கள் ஹிட்டாக, எங்கடா அந்த சொந்தமில்லை பந்தமில்லை பாடல் என ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். படத்தில் பாட்டை வைங்கப்பா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்க, படம் 50 நாள்களைத் தாண்டிய பிறகு அந்தப் பாடலை மீண்டும் படத்தில் சேர்த்துக் கொண்டனர். அப்படி இளையராஜாவின் முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் உருவாகி தூக்கிய பாடலை படத்தில் மீண்டும் ஒலிக்க வைத்தனர்.

இன்று இளையாஜா என்ற பெயர் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், முதல் படத்தில் அப்படியல்ல. சில பத்திரிகைகள் பின்னணி இசை சரியில்லை என எழுதின. பாடல்கள் பரவாயில்லை என்று ஒப்புக்கு பாராட்டின. ஆனந்த விகடன் தனது விமர்சனத்தில் படத்தின் இசை, பாடல்கள் குறித்து ஒருவரிகூட எழுதவில்லை.  சரித்திரம் படைத்த பாடல்கள் எழுதப்படாமலே புறந்தள்ளப்பட்டன. அவற்றையெல்லாம் கடந்துதான் அன்னக்கிளி படமும், பாடல்களும் இன்றும் ரசிகர்களால் பார்க்கவும், கேட்கவும்படுகின்றன.

1976 மே 14 வெளியான அன்னக்கிளி நாளை (மே 14) 47 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema, Ilayaraja Song