முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாத்திகத்துக்கும் இடம் கொடுத்த ஆன்மிகப் படம்.. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சினிமாவா? ’அம்மன் அருள்’ செய்த சம்பவம்!

நாத்திகத்துக்கும் இடம் கொடுத்த ஆன்மிகப் படம்.. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சினிமாவா? ’அம்மன் அருள்’ செய்த சம்பவம்!

அம்மன் அருள்

அம்மன் அருள்

சங்கர் - கணேஷ் இசையமைத்த இந்தப் படம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். பகுத்தறிவுக்கு சேதாரம் இல்லாமல் பக்திப் படம் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு இந்தப் படம்தான் பதில்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்மிகப் படங்களுக்கென்று டெம்ப்ளேட் உண்டு. நாத்திகராக கடவுள் மறுப்பு பேசுகிறவர் இறுதியில், கடவுளின் சக்தி அறிந்து ஆன்மிகவாதியாகி பால்குடம் ஏந்துவார். தனது சக்தியை மானுடர் உணரும்படி கடவுள் அவ்வப்போது அதிசயங்கள் புரிவார். தனது பக்தைக்கு நேரில் தரிசனம் அளிப்பார். கிளைமாக்ஸில் வில்லனை கொன்று தர்மத்தையும், ஆன்மிகத்தையும் நிலைநிறுத்துவார்.

இந்த டெம்ப்ளேட் சமாச்சாரங்கள் இல்லாமல் ஒரு ஆன்மிகப் படத்தைக்கூட பார்க்க முடியாது. ஆனால், இதற்கு முற்றிலும் வேறு மாதிரி ஒரு படம் 1973 இல் வெளிவந்தது. அந்தப் படம்தான் அம்மன் அருள்.

அம்மன் கோயில் பூசாரியாக நேர்மை, உண்மை, பக்தி என்று இருப்பவர் ராஜன். அவரது ஒரே மகள் கற்பகம். கோயிலை நிர்வகித்து வருகிறவர் அந்த ஊர் பண்ணையார். பேராசைக்காரர். இரண்டுபடி பால் கொடுத்துவிட்டு ஆறுபடி என்று கணக்கெழுதுகிறவர். ஜாடிக்கேற்ற மூடி போல் பண்ணையாருக்கு ஒரு கணக்கப்பிள்ளை.

பூசாரி ராஜனின் மகள் கற்பகம். தாயில்லாத பெண்ணுக்கு நாம் எதுவுமே செய்யவில்லை என்ற மனக்குறை ராஜனுக்கு. இந்த நேரத்தில் ஒரு பெண் அவரிடம் வைத்துக் கொள்ளத் தந்த ஐந்து சவரன் நகையை தனது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக தந்துவிடுவார். அந்தப் பெண் நகையை திருப்பிக் கேட்கையில், இன்னொருவர் தன்னிடம் வைத்துக் கொள்ளத் தந்த ஆயிரம் ரூபாயில் அதேபோல் ஐந்து சவரன் செயினை வாங்கி அந்தப் பெண்ணுக்கு தந்துவிடுவார். இப்போது ராஜன் ஆயிரம் ரூபாய் கடனாளி. பணத்தைத் தந்தவர் திரும்பி வந்து கேட்கும் போது அதனை தந்தாக வேண்டும். என்ன செய்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம், அம்மனுக்கு காணிக்கையாக வரவேண்டிய ஆயி[ரம் ரூபாய் ராஜனின் கைகளில் கிடைக்கும். அம்மனே அதனை தனக்கு தந்ததாக நினைத்து, பணம் தர வேண்டிய நபரிடம் அதனை கொடுத்துவிடுவார். அப்படி ராஜனின் பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும்.

இதில் கவனிக்க வேண்டியது, எங்கேயும் அம்மன் இவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்ய மாட்டார். எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால் அமைவது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டுத் திரும்பும் பண்ணையாரின் மகன் பாபு கற்பகத்தின் மீது காதல் கொள்வான். ஒருமுறை அவனை பாம்பு தீண்ட, கற்பகம் அவனை காப்பாற்ற, காதல் இன்னும் பலப்படும். மகனை காப்பாற்றியதற்காக பண்ணையார் பூசாரிக்கும், அவர் மகளுக்கும் பரிசு தருவார். உங்கள் மகன் உயிரின் மதிப்பு இதுதானா என்று தந்தையும், மகளும் அந்தப் பரிசை மறுக்க, தனது தாயின் கல்யாணப் புடவையை கற்பகத்திடம் தந்து, இது எனக்கு உயிரைப் போன்றது. அதையே உனக்குத் தருகிறேன் என்று பாபு உணர்ச்சிவசப்படுவான். அடேய், நீ கல்யாணம் பண்ணப் போறப் பொண்ணுக்குத்தான்டா அந்தப் புடவையை தரணும் என்று பண்ணையார் சொல்வது அவன் காதில் ஏறாது. கற்பகத்துக்கு மகிழ்ச்சி. புடவை கிடைத்ததன் மூலம் அவள்தான் பாபுவின் மனைவி என்பது உறுதியாகிவிட்டது.

பண்ணையாருக்கோ தனது மகனை பத்து லட்ச ரூபாய் சொத்து வைத்திருக்கும் முறைப்பெண்ணுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், மகனுக்கோ கற்பகத்தின் மீது காதல். தனது மருமகளுக்கும், மகனுக்கும் கல்யாணம் பண்ணலாமா என்பதை அம்மனிடம் கேட்க பண்ணையார் கோயிலுக்கு வருவார். அம்மன் சந்நிதியில் விபூதி, குங்குமப் பொட்டலங்களை வைத்து, இரண்டில் ஒன்றை எடுக்க வேண்டும். குங்குமம் கிடைத்தால் சம்மதம். விபூதி என்றால் சம்மதமில்லை. பண்ணையார் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றி தனது மகனுக்கும், கற்பகத்துக்கும் கல்யாணம் நடத்தலாமா என்று பார்ப்பார். மூன்றுமுறை பார்த்தும் மூன்று முறையும் விபூதியே வரும். அதாவது பாபு, கற்பகம் திருமணம் செய்யக் கூடாது என்பது அம்மனின் சங்கல்பம்.

நாத்திகவாதியான பாபுக்கு இதில் நம்பிக்கையில்லை. ஆனால், ஆன்மிகவாதிகள் பண்ணையார், பூசாரி, கற்பகம் நிலை அப்படியில்லையே. கற்பகம் பாபு தந்த புடவையை திருப்பித் தருவாள். பண்ணையார் முறைப்பெண்ணை திருமணம் செய்ய மகனை வற்புறுத்துவார். போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும் என்று பாபு ஊரைவிட்டே போவதென முடிவு செய்வான். தினம் பூஜை புனஸ்காரம் செய்த பூசாரிக்கே அம்மன் அருள்பாலிக்கவில்லையே என கோயிலில் மணி அடிப்பவன், இனிமேல் நான் மணியடிக்க மாட்டேன் என ஸ்ட்ரைக் செய்வான். அசிஸ்டெண்ட் பூசாரி கோபாலும் ஒத்துழையாமையை கடைபிடிப்பான். கள்ள கணக்கெழுதும் பண்ணையாரே அம்மன் மீது காண்டாகி, கோயிலை இடிக்க கடப்பாரையும் வேலையாட்களுமாக கிளம்புவார். இப்போதாவது அம்மன் காட்சி தந்து அருள்பாலிக்க வேண்டுமே...? அப்படி நடக்காது. பதிலுக்கு பூசாரி ராஜன் நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத கதைகளை மக்கள் முன் வெளிப்படுத்தி மன்னிப்பு கேட்பார்.

தெரிந்த கதை, செயினை மகளுக்குத் தந்து, அந்த செயினுக்காக இன்னொருவர் பணத்தை எடுத்தது, பிறகு அம்மனுக்கு வந்த நன்கொடையை எடுத்து சமாளித்தது. தெரியாத கதைதான் கடைசி ட்விஸ்ட். பண்ணையார்  தனது மகனுக்கும், அவரது மருமகளுக்கும் திருமணம் செய்வது குறித்து கேட்க வருகிறார் என நினைத்து இரண்டு பொட்டலங்களிலும் விபூதியை கட்டி வைத்துவிடுவார் பூசாரி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பண்ணையார் அவரது மகனுக்கும், பூசாரியின் மகள் கற்பகத்துக்கும் திருமணம் செய்யலாமா என்று அம்மன் சந்நதியில் சம்மதம் கேட்பார். இரண்டுமே விபூதி பொட்டலங்கள் என்பதால் சம்மதம் கிடைக்காது. அப்படி மகளின் காதல் வாழ்க்கைக்கு பூசாரியே பூக்குளி வெட்டியிருப்பார்.

பூசாரி இயல்பில் நல்லவர் என்பதால், போனது போகட்டும் என ஊர்க்கார்ரர்கள் தேற்ற, பாபுவும், கற்பகவும் திருமணம் செய்ய இரண்டு பேர் அப்பாக்களும் சம்மதம் அளிப்பார்கள்.

இந்த மொத்தப் படத்தில் அம்மன் அதிசயங்கள் நிகழ்த்துவதாகவோ, காட்சித் தருவது போன்ற அற்புதங்கள் செய்வதாகவோ காட்டியிருக்க மாட்டார்கள். அவனவன் செய்யும் தவறு அவனவன் தலையில் விடியும் என்பதை பகுத்தறிவுடன் சொல்லியிருப்பார்கள். அதேபோல் நாத்திகனான பாபு கடைசிவரை நாத்திகளாகவே இருப்பான். மற்ற ஆன்மிகப் படங்களைப் போல மனம் மாறி ஆன்மிகவாதியாக எல்லாம் மாறமாட்டான்.

Also read... அஜித்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்! - திரைத்துறையினர் இரங்கல்

இதுவரை வந்த அனைத்து கடவுள் படங்களையும்விட மிகச்சிறப்பானது இந்த அம்மன் அருள். பூசாரி ராஜனாக ஏவிஎம் ராஜன் நடித்திருந்தார். அவரது மகள் கற்பகமாக மஞ்சுளா, பாபுவாக ஜெய்சங்கர். தனது குணத்தைப் போலவே ஜென்டிலான நடிப்பு. பண்ணையாராக அசோகன் வழக்கம் போல் அசத்தல். கொஞ்சம் மனநிலை தவறிய வேடத்தில் தேங்காய் சீனிவாசன். பைத்தியமாக இருந்து குணமாகி அசிஸ்டென்ட் பூசாரியாகும் கோபால் என்ற வேடத்தில் ஸ்ரீகாந்தும், அவரது தந்தையாக ஒருவிரல் கிருஷ்ண ராவும் நடித்திருந்தனர். வருகிற காட்சிகள் அனைத்திலும் தனது பேச்சால் கவர்ந்தவர் பண்ணையாரின் கணக்கப்பிள்ளையாக வரும் தங்கவேலு.

சங்கர் - கணேஷ் இசையமைத்த இந்தப் படம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். பகுத்தறிவுக்கு சேதாரம் இல்லாமல் பக்திப் படம் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு இந்தப் படம்தான் பதில். 1973 ஏப்ரல் 27 வெளியான அம்மன் அருள் நேற்று ஐம்பதாவது வருடத்தை நிறைவு செய்தது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema