1978-ல் இந்தியில் சாஜன் பினா சுகாகன் என்ற திரைப்படம் வெளியானது. எஸ்.குமார் எழுதிய கதைக்கு கமலேஷ்வர் திரைக்கதை எழுத, ஸ்வான் குமார் தக் படத்தை இயக்கியிருந்தார். நுதுன் சமந்தா, ராஜேந்திர குமார் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
ஆஷா என்ற இளம் பெண் தனது தந்தையுடன் வசித்து வருவாள். ஏழ்மையான குடும்பச்சூழல். அவளுக்கு மருத்துவம் படிக்கும் ராஜ் குமாருடன் காதல் ஏற்படும். அவனது மருத்துவப் படிப்பு முடிந்ததும் அவனை திருமணம் செய்து கொள்ளலாம் என ஆஷா கனவு காண்பாள். ஆனால், ராஜ் குமாரோ படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்கென வெளிநாடு சென்றுவிடுவான். ஆஷாவால் அவன் திரும்பி வரும்வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் போகும்.
இந்நிலையில், மரணப் படுக்கையில் இருக்கும் அவளது தந்தை, தனது நண்பனின் மகனை ஆஷா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சத்தியம் வாங்கி செத்துப் போவார். தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லாத ஆஷா அவர் சொன்னபடி அவரது நண்பரின் மகன் கோபால் சோப்ராவை மணந்து கொள்வாள். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறக்கும், மூவரும் ஒவ்வொருத்துறையில் சிறந்தவர்களாக விளங்குவார்கள்.
கோபால் சோப்ராவுக்கு மாற்றலாகி குடும்பம் மும்பைக்கு வரும். இதயத்தில் பிரச்சனை காரணமாக ஆஷாவுக்கு சிகிச்சை நடந்துவரும். இந்நிலையில், ஆஷாவின் பழைய காதலன் ராஜ் குமார் அவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பது தெரிய வரும். அவர் இப்போது பிரபல மருத்துவர். அவரது தம்பி ஆஷாவின் மூத்த மகளை காதலிப்பான். இந்த திருப்பங்களுக்கு நடுவில், ஆஷாவின் பழைய காதலை குடும்பத்திடம் வெளிப்படுத்திவிடுவேன் என ஒருவன் அவளை பிளாக்மெயில் செய்வான். அவன் ஒருகட்டத்தில் கொல்லப்பட, பழி ராஜ் குமார் மீது விழும். கடைசியில் என்னானது என்பது கதை.
உணர்ச்சிகரமான குடும்பச் சித்திரமான இந்தப் படத்தை தமிழில் கிருஷ்ணன் - பஞ்சு மங்கள நாயகி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சரத்பாபு, சிவச்சந்திரன் ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில்தான் ஷோபனா தனது 10-வது வயதில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் சினிமாவில் அறிமுகமானார். வி.குமார் இசையமைக்க, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா, பி.சுசீலா, வாணி ஜெயராம், டி.எம்.சௌந்தர்ராஜன், கே.ஜே.யேசுதாஸ் ஆகியோர் பாடல்கள் பாடினர்.
மங்கள நாயகி என்ற பெயரில் விஜயன் நடித்த படம் ஒன்றும் உண்டு. இரண்டையும் பலர் குழப்பிக் கொள்வதுண்டு. இது வேறு, அது வேறு. இந்த குழப்பம் போதாது என்று மங்கள நாயகன் என்ற படமும் பிறகு வெளியாகி சாதா குழப்பத்தை மெகா குழப்பமாக்கியது. மங்கள நாயகி இப்போது எங்கும் பார்க்கக் கிடைக்காததும் ஒரு காரணம்.
1980 மார்ச் 21-ல் வெளியான மங்கள நாயகி நேற்றுடன் 43 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema