கே.ஆர்.விஜயா பிறந்ததும் வளர்ந்ததும் சென்னையில். அவரது தந்தை ராமச்சந்திர நாயர் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் நடித்தவர். மூத்த மகள் தெய்வானையை நடிகையாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, 1963 இல் அதனை சாதித்தார். தெய்வானை கே.ஆர்.விஜயா என்ற பெயரில் கற்பகம் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த கற்பகம் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. 22 வருடங்கள் கழித்து, 1985 இல் அதே கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் தனது 200 வது படம் படிக்காத பண்ணையாரில் கே.ஆர்.விஜயா நடித்தார். அதுவும் ஹிட்டாகி அவருக்கு பேர் வாங்கித் தந்தது.
இந்த படிக்காத பண்ணையாருக்குப் பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது. அதில் ஒரு கதையைத்தான் பார்க்கப் போகிறோம். 1960 இல் வங்க மொழிப் படம் ஒன்றை தமிழில் எடுக்க இயக்குனர் பீம்சிங் முடிவு செய்கிறார். அப்படத்தை தமிழுக்கேற்ப மாற்றி எழுதும் பொறுப்பை அவர் ஸ்ரீதரிடம் தர, படத்தைப் பார்த்த ஸ்ரீதர், அது தனது ரசனைக்குரியதாக இல்லை என தனது உதவியாளர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு அந்தப் பொறுப்பை பரிந்துரைக்கிறhர். பீம்சிங்கும் சம்மதிக்க, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுத்தில் உருவானதுதான் படிக்காத மேதை. இதன் பெயரில் ஒரு பகுதியை எடுத்து தனது 1985 ஆம் ஆண்டு படத்துக்கு படிக்காத பண்ணையார் என்று பெயர் வைத்தார். அப்படியானால் கதை...?
படிக்காதே மேதை கதையையொட்டி 1967 இல் ஒரு கதையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி கண் கண்ட தெய்வம் என்ற பெயரில் எடுத்தார். ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, பத்மினி பிரதான வேடங்களில் நடித்தனர். படம் ஹிட்டாக, தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தைதான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1985 இல் படிக்காத பண்ணையார் என்று எடுத்தார். அதாவது படிக்கா பண்ணையாரின் கதை, பெயர் என எல்லாமே ஏற்கனவே கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் பலமுறை மென்று ருசிக்கப்பட்டதே.
கண் கண்ட தெய்வத்தில் ரங்காராவ் ஏற்று நடித்த வேடத்தை படிக்காத பண்ணையாரில் சிவாஜி கணேசன் செய்தார். பத்மினியின் வேடத்தில் கே.ஆர்.விஜயா. வில்லனாக வி.கே.ராமசாமி. படிக்காத நல்லுள்ளமும், தீரமும் கொண்ட பண்ணையார், அவரது தம்பி, தம்பியின் மனைவி, அவர்களின் மகள், மூன்று மகன்கள், ஒரு வில்லன், அவன் தம்பி என இரண்டு குடும்பத்துக் கதையே படிக்காத பண்ணையார். அதனை தனக்கேயுரிய உணர்ச்சிகரத்துடனும், சென்டிமெண்டுடனும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எடுத்திருந்தார். படமும் முதலுக்கு மோசமில்லாமல் போனது. கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்திய கே.எஸ்.கோபாலகிருஷ்ணனே அவரது 200 வது படத்தை இயக்கியது ஓர் இனிய தற்செயல். 1985 மார்ச் 23 வெளியான படிக்காத பண்ணையார் இன்று 38 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema