இயக்குனர் செல்வாவின் ட்ராக் ரெக்கார்ட் ஆச்சரியமானது. பச்சையப்பா கல்லூரியில் டிகிரி முடித்தப் பின் விளம்பர கம்பெனி ஒன்றில் பணியில் சேர்கிறார். பிறகு தியாகம் தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றுகிறார். அந்த நேரத்தில் அவர் பாரதியார் குறித்து எடுத்த ஆவணப்படம் டெல்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. எழுத்தாளர் அகிலனின் சாகித்ய அகதாமி விருது பெற்ற சித்திரப்பாவை நாவலை தொலைக்காட்சி தொடராக இயக்கினார். நாசர், வைஷ்ணவி, பாத்திமா பாபு உள்ளிட்டோர் இதில் நடித்தனர். 13 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.
சன் தொலைக்காட்சிக்காக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூர்யா என்ற தொடரில் நடித்தார். இதனையும் செல்வாதான் இயக்கினார். ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பில் இருந்த சோழா கிரியேஷன்ஸின் தொலைக்காட்சி தொடரையும் இவர் இயக்கினார். தொடர் வெற்றி பெற்றது. செல்வாவின் திறமை அவர்களுக்குப் பிடித்துப் போனது. செல்வாவை வைத்து மீண்டும் படத் தயாரிப்பில் சோழா கிரியேஷன்ஸ் இறங்கியது. முதல் படமாக தலைவாசல் வெளியானது.
கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்வதை களமாகக் கொண்டு தலைவாசலை எழுதி, இயக்கினார் செல்வா. பச்சைப்பா கல்லூரியில் அனுபவப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கற்பனை சேர்த்து தலைவாசலை உருவாக்கினார். படத்தில் வரும் கல்லூரிக்கு நாச்சியப்பன் கல்லூரி என்று பெயர் வைத்தார். பீடா சேட் என்ற வில்லன் வேடத்தில் நாசர் நடித்தார். தேவர் மகனுக்கு இணையான வேடம் இது. நாசரின் சிறந்த நடிப்பைப் பட்டியலிட்டால் தலைவாசலுக்கு சிறப்பான இடம் உண்டு.
தலைவாசலில் மடிப்பு அம்சா என்ற வேடத்தில் விசித்ராவை அறிமுகம் செய்தார். அதேபோல் ’தலைவாசல்’ விஜய்க்கும் இதுவே முதல் படம். பால பாரதியின் இசையில் வைரமுத்து எழுதியப் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி படமும் 100 நாள்கள் ஓடி லாபம் சம்பாதித்தது.
தலைவாசலின் வெற்றியைத் தொடர்ந்து அதே சோழா கிரியேஷனுக்கு அடுத்தப் படமான அமராவதியை இயக்கினார். இதில் நண்பர்களில் ஒருவராக நடிக்க தேர்வானவர்தான் அஜித் குமார். அதற்கு முன் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். வேட்டி உள்பட பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் பிரேம புத்தகம் என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துக் கொண்டிருந்தார்.
அமராவதியில் நண்பன் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் பிறகு கதாநாயகனாக மாற்றப்பட்டார். நாயகனுக்கு தேர்வானவர் அஜித்தின் நண்பராக படத்தில் நடித்தார். நடிகை சங்கவிக்கும் நாயகியாக இதுவே முதல் படம். இதிலும் நாசர், தலைவாசல் விஜய் நடித்தனர். சின்ன வேடம் ஒன்றில் விசித்திராவும் தோன்றினார். இவர்கள் தவிர சபிதா ஆனந்த், கல்யாண் குமார், சார்லி, நிழல்கள் ரவி, மௌனிகா ஆகியோரும் நடித்தனர். அமராவதியின் சிறப்பு அதன் பாடல்கள். தலைவாசல் பால பாரதி இசையில் வைரமுத்து எழுதிய அடி சோக்கு சுந்தரி... இளைஞர்களின் ஈவ்டீசிங் பாடலாக புகழ்பெற்றது. வைரமுத்து வரியில் எஸ்.பி.பி. பாடிய புத்தம் புது மலரே... இப்போதும் ரசிகர்கள் விரும்பிக் கேட்கும் பாடலாக உள்ளது. தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே... இன்னொரு அருமையான மெலடி.
Also read... வாசனின் சாந்தி நிலையமும் ஆங்கில நாவலாசிரியரும்..! சுவாரஸ்ய தகவல்கள்
பாடல்கள் காரணமாக அமராவதி ரசிகர்களிடையே பிரபலமானது. ஆனால், தலைவாசல் படம் அளவு வெற்றியை பெறவில்லை. அமராவதி வெளியான ஒரு மாதம் கழித்து தெலுங்குப் படம் பிரேம புஸ்தகம் வெளியானது. அஜித்தின் முதல் படமாக இந்தப் படமே வெளியாகியிருக்க வேண்டும். படம் தயாரிப்பில் இருக்கையில் படத்தின் இயக்குனர் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். இதனால், படப்பிடிப்பு பல மாதங்களுக்கு தடைபட்டது. அதன் பிறகு அவரது தந்தை கொல்லப்புடி மாருதி ராவ் மீதி படத்தை இயக்கி முடித்தார். இதன் காரணமாக அமராவதி முந்திக் கொண்டு அஜித்தின் முதல் படமானது.
அமராவதியின் போஸ்ட் புரொடக்ஷனின் போது அஜித்துக்கு பைக் விபத்து ஏற்பட்டு படுத்தப் படுக்கையானார். அவருக்கு நடிகர் விக்ரம் டப்பிங் பேசினார். இந்த விபத்து காரணமாக பாச மலர்கள், பவித்ரா என இரண்டேயிரண்டு படங்களில் மட்டுமே அடுத்த வருடம் அஜித் நடித்தார். இதில் பாசமலர் படத்துக்கும் விக்ரமே டப்பிங் பேசினார். பவித்ராவில் டப்பிங் ஆர்டிஸ்ட் சேகர் அஜித்துக்கு குரல் கொடுத்தார். இந்த இரண்டு படங்களிலும் அஜித்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத வேடங்களே தரப்பட்டன. அதற்கு அடுத்த வருடம் ராஜாவின் பார்வையில் படத்தில் விஜய்யுடன் தோன்றினார். விஜய் நாயகன், அஜித்துக்கு சின்ன வேடம். 1995 இல் வெளியான வஸந்தின் ஆசை அவருக்கு நாயகன் அந்தஸ்துடன், ரசிகர்களிடம் செல்வாக்கையும் பெற்றுத் தந்தது. அமரவாதியின் போது ஏற்பட்ட விபத்திலிருந்து அஜித் முழுமையாக மீள கிட்டத்தட்ட 20 மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
அடுத்த மாதம் அமராவதி படத்தை ரீ ரிலீஸ் செய்ய சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema