முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மலையாளம் டூ தமிழ்.. கைகொடுத்த இளையராஜா.. ரீமேக்கில் கவனிக்க வைத்த 'கோபுர வாசலிலே'!

மலையாளம் டூ தமிழ்.. கைகொடுத்த இளையராஜா.. ரீமேக்கில் கவனிக்க வைத்த 'கோபுர வாசலிலே'!

கோபுர வாசலிலே

கோபுர வாசலிலே

சீனிவாசன் எழுதும் திரைக்கதைகள் தனித்துவமானவை. மனிதனின் இயல்பான  குணாதிசயங்களை நாம் அறியாத திசைகளில் முன்வைப்பவை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1990 இல் பாவம் பாவம் ராஜகுமாரன் மலையாளப் படம் வெளியானது. சீனிவாசன் திரைக்கதை எழுத, கமல் படத்தை இயக்கியிருந்தார். கதாநாயகனாக சீனிவாசனும், நாயகியாக ரேகாவும் நடித்திருந்தனர். படம் மலையாளத்தில் வெற்றி பெற்றது.

சீனிவாசன் எழுதும் திரைக்கதைகள் தனித்துவமானவை. மனிதனின் இயல்பான  குணாதிசயங்களை நாம் அறியாத திசைகளில் முன்வைப்பவை. அவரது வடக்குநோக்கு எந்திரம், அழகில்லாத தாழ்வு மன்பான்மை கொண்ட ஒருவனுக்கு அழகான மனைவி அமையும் போது அவனுக்குள் ஏற்படும் ஐயங்களையும், அதன் தீவிரத்தன்மையால் விளையும் எதிர்மறை அம்சங்களையும் நகைச்சுவையுடன் விவரித்தது. சிந்தா நிஷ்டயாய சியாமளா, எந்த வேலையிலும் நிலைக்காமல் குடும்பத்தின் பொறுப்புகளை தட்டிக்கழிக்கும் ஒருவன் எப்படி தனது பொறுப்புகளை உணர்ந்து திருந்துகிறான் என்பதைப் பற்றியது.

இந்த இரு படங்களையும் தமிழில் ரீமேக் செய்து மூலப்படைப்புக்கு களங்கம் விளைவித்தனர். அந்தளவு மோசமான தழுவல். மலையாளப் படத்தை எடுத்தவர்களே அதை தமிழில் ரீமேக் செய்யும் போது கிடைக்கும் நேர்த்தி, தமிழ்ப்பட இயக்குனர்கள் ரீமேக் செய்கையில் கிடைப்பதில்லை. வெள்ளைரோஜா போன்ற ஒருசில பழைய திரைப்படங்கள் விதிவிலக்கு. அதேபோல், தமிழில் வெற்றி பெற்ற பல படங்களை மலையாளத்தில் ரீமேக் செய்து கெடுத்திருக்கிறார்கள்.

பாவம் பாவம் ராஜகுமாரன் படத்தில் சீனிவாசன், சித்திக், ஜெதீஷ், மணியம்பிள்ளை ராஜு நால்வரும் ஒரே வீட்டில் தங்கி வேலைக்குச் செல்லும் இளைஞர்கள். சீனிவாசன் கஞ்சன். எரிகிற பல்புக்கும் கணக்குப் பார்க்கிறவர். ஆடம்பர செலவுகளிலிருந்து ஒதுங்கி இருப்பவர். அவரது கஞ்சத்தனம் நாளுக்கு நாள் மற்றவர்களை வெறுப்பேற்றி வரும். சீனிவாசனுக்கு உள்ள ஒரே பலவீனம், பெண். ஒரு நல்ல அழகான பெண்ணை திருமணம் செய்ய தேடிக் கொண்டிருப்பார். இதனைப் பயன்படுத்தி, அவரை ஒரு பெண் காதலிப்பதாக போலியாக கடிதம் எழுதுவார்கள் மற்ற மூவரும். அவளுக்கு ராதிகா என்ற பெயரும் தருவார்கள். அவளது பெயரைச் சொல்லி, சீனிவாசனை செலவு செய்ய வைப்பார்கள். கஞ்சனான சீனிவாசனிடமிருந்து பணம் கறக்க வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு நோக்கம் இருக்காது.

சீனிவாசன் வங்கியில் வேலை பார்க்கும் ரேகாவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்து கொண்டிருப்பார். ரேகாவின் பெயரும் ராதிகா என்று அறியும் போது, தனக்கு காதல் கடிதம் எழுதும் ராதிகா வங்கியில் வேலை பார்க்கும், தனது மனம் கவர்ந்த ராதிகா என்றே நினைப்பார். இதனை அறியும் நண்பர்கள், வங்கியில் வேலை பார்க்கும் குடிகார மம்முக்கோயாவின் உதவியுடன் இந்த காதல் நாடகத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வார்கள். இவை எதுவும் அறியாத ராதிகாவும், சீனிவாசனும் இந்த நாடகத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக சீனிவாசன் மனநிலை தவறும் அளவுக்கு போவார். அவரைக் குறித்து எந்தத் தகவலும் இல்லாமல் போகும். அவர் இறந்துவிட்டதாக மற்ற மூவரும் கருதுவார்கள்.

ஐந்து வருடங்கள் கழித்து, சீனிவாசன் உயிருடன் இருப்பதை அவர்கள் அறிவார்கள். அது தெரியும் போது, பாதிக்கப்பட்ட சீனிவாசனின் பழிவாங்கும் திட்டத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டிருப்பார்கள். இதோ உயிர் போகப் போகிறது என்ற நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்படும். பார்வையாளர்களை சந்தோஷப்படுத்திய அந்தத் திருப்பம் படத்தின் நேர்மறை அம்சமாக மாறி படத்தை வெற்றி பெறச் செய்தது.

எண்பது சதவீதம் நகைச்சுவை கொண்ட பாவம் பாவம் ராஜகுமாரனை 1991 இல் ப்ரியதர்ஷன் தமிழில் கோபுர வாசலிலே என்ற பெயரில் ரீமேக் செய்தார். அவர் இப்படி பல மலையாளப் படங்களை தமிழ், இந்தியில் ரீமேக் செய்துள்ளார். சில நேரம் பழம் விழும், பல நேரம் கல் விழும். கோபுர வாசலிலே பழமும் அல்ல, கல்லும் அல்ல, காய். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. தேவதைப் போலொரு பெண்ணிங்கு வந்ததிங்கே... பாடல் இளைஞர்களின் தேவகானமானது. கார்த்திக், பானுப்ரியா பிரதான வேடங்களில் நடித்த கோபுர வாசலிலே படத்தில் மலையாளம் அளவுக்கு நகைச்சுவை பேசப்படவில்லை. எனினும் தமிழுக்குப் போதுமானது. அழகில்லாத சீனிவாசன் அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்ய தேடுகிறார் என்பதில் இருந்த நியாயம், கார்த்திக் நடித்த போது அத்தனை ஆப்டாக பொருந்தவில்லை. எனினும் படம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது.

இளையராஜாவின் இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் (குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி) இன்றும் கோபுர வாசலிலேயை பார்க்கும் படமாக வைத்துள்ளன. 1991 மார்ச் 22 வெளியான கோபுர வாசலிலே படம் தற்போது 32 வது வருடத்தை நிறைவு செய்துள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema