2022 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா நாயகர்கள் சிலர் வெற்றியை பதிவு செய்ய தடுமாறிக் கொண்டிருந்த பொழுது விருமன்,சர்தார், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து ஒரே ஆண்டில் மூன்று வெற்றிகளை பதிவு செய்த நடிகர் என்ற பெருமையுடன் தமிழ் திரை உலகை திரும்பி பார்க்கச் செய்தவர் நடிகர் கார்த்தி.
நடிகர் சிவகுமாரின் இளைய மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளம் எல்லாம் கார்த்திக்கு முதல் திரைப்படம் வெளியாகும் முதல் நாள் வரையில்தான் தேவைப்பட்டது. அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் திரைப்படம் வெளியான முதல் காட்சியிலேயே தமிழ் சினிமாவிற்கு தான் எப்படிப்பட்ட நடிகன் என்பதை நிரூபித்து விட்டார் கார்த்தி.
பராசக்தி திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகு முதல் படத்தில் எந்த நடிகரும் ஏற்படுத்தாத அதிர்வலையை பருத்திவீரன் திரைப்படத்தில் ஏற்படுத்திய நடிகர் கார்த்தி, இது நாள் வரையில் திரையரங்குகளில் அதிக நபர்கள் பார்த்த திரைப்படம் என்ற சாதனையை பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தன்வசப்படுத்தி வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன், சுசீந்திரன் இயக்கத்தில் நான் மகான் அல்ல, லிங்குசாமி இயக்கத்தில் பையா என கார்த்தியின் திரைப்படத் தேர்வு ஒவ்வொன்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாச விருந்தாக அமைய ஏறு முகத்தில் பயணிக்க தொடங்கினார் கார்த்தி. கார்த்தியின் வர்த்தக எல்லைகள் அவர் அண்ணனைப் போல தெலுங்கு தேசத்திலும் பரவ தமிழ் தெலுங்கு என இரு மொழிகளுக்குமான கதைகளை தேர்வு செய்ய தொடங்கினார் கார்த்தி.
சிறுத்தை திரைப்படத்தில் காமெடியில் கலக்கிய கார்த்தி பெரும்பாலான குழந்தைகளின் மனதைக் கவர, தீரன் திரைப்படத்தில் மிடுக்கான ஒரு காவல்துறை அதிகாரி, கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் எல்லா குடும்பத்திலும் வாழும் ஒரு கடைசி தம்பி என கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்தார்.
Also read... நகைச்சுவையின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணிக்கு ஹேப்பி பர்த்டே!
கைதி திரைப்படத்தில் பாடல், நாயகி என வர்த்தக அம்சங்கள் எதுவும் இல்லாமல் ஒரு இமாலய வெற்றியை பதிவு செய்ய முடியும் என சாத்தியப்படுத்தி காட்டிய கார்த்தி அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசகர்கள் மனதில் வாழ்ந்து வந்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்துள்ளார்.
திரைத்துறையை தாண்டி உழவன் அறக்கட்டளையின் மூலம் விவசாயம் தலைத்தோங்க தனது பங்களிப்பை வழங்கி வரும் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் பெருமை கொள்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Karthi