முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எம்ஜிஆர் சாதனையை முறியடித்த சிவாஜி.. 6 வருட சிம்மாசனத்தை தனதாக்கிய திரிசூலம்!

எம்ஜிஆர் சாதனையை முறியடித்த சிவாஜி.. 6 வருட சிம்மாசனத்தை தனதாக்கிய திரிசூலம்!

திரிசூலம்

திரிசூலம்

எம்ஜி ராமச்சந்திரன் நடிப்பில் அரிதாக 200 தினங்களை கடந்த படங்களில் உலகம் சுற்றும் வாலிபன் படமும் ஒன்று. மக்கள் வண்டிகட்டி, பொதி சோறு எடுத்து வந்து படத்தைப் பார்த்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1973 மே 11 வெளியான எம்ஜி ராமச்சந்திரனின் உலகம் சுற்றும் வாலிபன் அதுவரை வெளியான அனைத்துத் தமிழ்ப் படங்களின் வசூலையும் முறியடித்தது. படத்தை அவரே தயாரித்து, இயக்கியிருந்தார். விஞ்ஞானி முருகன், அவரது தம்பி சிபிசிஐடி ராஜு என எம்ஜி ராமச்சந்திரனுக்கு இரண்டு வேடங்கள். லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று நாயகிகள், அவர்களின் கவர்ச்சி நடனங்கள், அதிசாகச சண்டைக் காட்சிகள் என உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் சுழன்றடித்தது. பல திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டது.

எம்ஜி ராமச்சந்திரன் நடிப்பில் அரிதாக 200 தினங்களை கடந்த படங்களில் இதுவும் ஒன்று. மக்கள் வண்டிகட்டி, பொதி சோறு எடுத்து வந்து படத்தைப் பார்த்தனர். எம்.எஸ்.வி. எக்ஸ்ட்ரா உற்சாகத்துடன் பாடல்கள் அளித்திருந்தார். படம் வெளியான போது எங்கும் அந்தப் பாடல்களே ஒலித்தன. உலகம் சுற்றும் வாலிபன் போல் ஒரு கமர்ஷியல் ஹிட்டை இனிமேல் தமிழ் சினிமா எதிர்பார்க்க முடியாது என்று அன்று எழுதவும், பேசவும் செய்தனர்.

அது ஒருவகையில் உண்மை. உலகம் சுற்றும் வாலிபனின் வசூலை பிற படங்களால் நெருங்க முடியவில்லை. ஏன், எம்ஜி ராமச்சந்திரனாலேயே முடியவில்லை. அப்படி ஆறு வருடங்கள் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற கிரீடத்துடன் உலகம் சுற்றும் வாலிபன் தமிழ் சினிமாவின் தலையில் வீற்றிருந்தது.

வல்லவனுக்கு வல்லவன் ஒருநாள் வரத்தானே செய்வான். அப்படி வந்த படம்தான் திரிசூலம். 1978 இல் கன்னடத்தில் ராஜ்குமாரின் சங்கர் குரு படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. வி.சோமசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதனை தமிழில் ரீமேக் செய்ய சிவாஜி ஆசைப்பட்டார். அதன்படி படத்தின் உரிமை வாங்கப்பட்டது. சிவாஜியை வைத்து தொடர்ச்சியாக படம் இயக்கி வந்த பி.மாதவன் படத்தை இயக்குவது எனவும் முடிவானது. அந்த நேரம் சொந்தப்பட வேலைகள் காரணமாக, படத்தை இயக்க முடியாது என முன்பணத்தைத் திருப்பித் தந்தார் மாதவன். அது அவர் செய்த மாபெரும் தவறு.

திரிசூலம் வாய்ப்பை மறுத்தப் பிறகு அவர் இயக்கிய படங்கள் எதுவும் சிறப்பாக ஓடவில்லை. பல வருடங்கள் கழித்து மாதவனின் ஹிட்லர் உமாநாத் படத்தில் சிவாஜி நடித்தார். எனினும் பழைய மாதவன் திரும்ப வரவில்லை. அவர் மட்டும் திரிசூலம் வாய்ப்பை தவறவிடாமல் இருந்திருந்தால் அவரது உயரம் வேறு மாதிரி இருந்திருக்கும்.

Also read... ஏகாதேசி விரதத்துக்காக மகனைக் பலிகொடுக்கும் மன்னன்... 1947-ல் திரைவடிவமான ருக்மாங்கதன் கதை

பி.மாதவன் இயக்கத்திலிருந்து விலக, கே.வியனுக்கு அந்த வாய்ப்பு சென்றது. அவரது இயக்கத்தில் சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, ரீனா, நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், ஜெய் கணேஷ், புஷ்பலதா, எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோர் நடித்தனர். உலகம் சுற்றும் வாலிபனுக்கு இசையமைத்த அதே எம்.எஸ்.வி.தான் இசை. அட்டாசமான நான்குப் பாடல்கள். 1979 ஜனவரி 27 படம்  வெளியாகி தமிழகமெங்கும் மகத்தான வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் 11 திரையரங்குகளில் வெள்ளி விழா ஓடியது. அதற்கு முன் எத்தனையோ படங்கள் வெள்ளிவிழா கண்டிருந்தாலும் 9 ஊர்களில் 11 திரையரங்குகளில் அதுவரை எந்தப் படமும் வெள்ளிவிழா ஓடியதில்லை. அந்தத் திரையரங்குகள்.

சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி

கோவை - கீதாலயா

வேலூர் - அப்சரா

மதுரை - சிந்தாமணி

திருச்சி - பிரபாத்

தஞ்சை - அருள்

சேலம் - ஓரியண்டல்

திருவண்ணாமலை - ஸ்ரீபாலசுப்பிரமணியம்

பாண்டிச்சேரி - ஜெயராமன்

உலகம் சுற்றும் வாலிபன் வசூலை முறியடித்த திரிசூலம் அன்றைய கணக்குப்படி கேளிக்கை வரியாக மட்டும் அரசுக்கு ஒரு கோடிக்கு மேல் வசூலித்துத் தந்தது.

திரிசூலம் படத்தின் வசூலை 1982 இல் வெளியான ஏவிஎம் தயாரித்த கமலின் சகலகலாவல்லவன் திரைப்படம் முறியடித்தது. அதுவரை நம்பர் ஒன் இடத்தில் திரிசூலம் வீற்றிருந்தது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema