தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முதன்மை நாயகனாக விளங்கியவர் டி.ஆர்.மகாலிங்கம். அந்த இருவரையும் போல குரலே இவருக்கும் மூலதனம். பாடகராக பாகவதருக்கும், கிட்டப்பாவுக்கும் அடுத்து வருகிறவர். 1933 இல் கிட்டப்பா தனது 27 வது வயதில் நாடகமேடையில் உயிரைவிடும் போது டி.ஆர்.மகாலிங்கத்துக்கு வயது 9. நான்கு வருடங்கள் கழித்து ஏவி மெய்யப்ப செட்டியார் தனது நந்தகுமார் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். நாடகத்தில் மகாலிங்கத்தின் குரலைக் கேட்டு, அதில் கரைந்து போய் இந்த வாய்ப்பை அளித்தார்.
நந்தகுமார் சுமாராகப் போனாலும், மகாலிங்கத்தின் குரல் வெற்றி பெற்றது. தொடர்ந்து படங்கள் கிடைத்தன. 1945 இல் ஏவி மெய்யப்ப செட்டியார் மகாலிங்கத்தை வைத்து எடுத்த ஸ்ரீவள்ளி திரைப்படம் மகத்தான வெற்றியை பெற்று, அவரை முன்னணி நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளின் இறுதியில் மகாலிங்கம் கொஞ்சம் கொஞ்சமாக பீல்ட் அவுட்டானார். அவரது கடைசி ஹிட்களில் ஒன்று ஆடவந்த தெய்வம்.
இதில் மருதூரைச் சேர்ந்த மிட்டாதாராக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். ஆடல், பாடல் கலைகளில் நுட்பமான ரசனை கொண்டவர். அவருக்கு பூஞ்சோலையைச் சேர்ந்த பைரவி என்ற தெரு நடனக்காரியின் மேல் மையல் தோன்றும். ஆனந்தனின் அம்மா, தனது அண்ணன் சிங்காரத்தின் மகள் கல்யாணியை ஆனந்தனுக்கு மணம் முடிக்க நினைப்பார். எல்லா கதையிலும் ஆசைக்கு அணை போட ஒரு வில்லன் இருக்கத்தானே செய்வான். இதில் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது, கல்யாணியின் மீது மோகம் கொண்ட மலையப்பன். திருமணமாகி மனைவியை இழந்தவன். சிங்காரத்தை சிறைக்கு அனுப்பி, கல்யாணியை அடையப் பார்க்கிறான். தந்தையை சிறையிலிருந்து மீட்க, ஆனந்தன் ஏற்பாடு செய்யும் நடனப்போட்டியில், நடனத்தில் சிறந்தவளான கல்யாணி கலந்து கொள்கிறாள். அவள் ஆடும் போது, மேடையில் கண்ணாடித்துண்டுகளைப் போட்டு அவள் ஆட முடியாதபடி செய்கிறான் மலையப்பன். அவள் தோற்றுப் போக, ஆனந்தன் பைத்தியமாகிறான்.
அதன் பின் மலையப்பன் கல்யாணியை கடத்த, அவள் தப்பிக்க, பைரவியிடம் கல்யாணி அடைக்கலமாகி அவளுக்கு நடனம் சொல்லித்தர என்று கதை காட்டாறு போல் ஓடும். கல்யாணி கற்றுத் தந்த நடனத்தை ஆனந்தன் முன் ஆடி, அவனது பைத்தியத்தை பைரவி குணப்படுத்துவது படத்தின் ஹைலைட் காட்சி. இறுதியில் மலையப்பனின் சூழ்ச்சியை முறியடிக்க, கல்யாணி தன்னுயிரை தந்து ஆனந்தன், பைரவியை ஒன்று சேர்த்து வைப்பதுடன் சுபம்.
இதில் கல்யாணியாக அஞ்சலி தேவி நடித்தார். அவரது நடனத்திறமையை வெளிக்கொணர்வதற்காகவே எழுதப்பட்ட கதாபாத்திரம். பைரவியாக ஈ.வி.சரோஜ நடித்திருந்தார். மலையப்பனாக தான் வரும் காட்சியில் எல்லாம் அப்ளாஸ் அள்ளினார் எம்.ஆர்.ராதா. படத்தில் தான் பாடுவதாக அமைந்த அனைத்துப் பாடல்களையும் டி.ஆர்.மகாலிங்கமே பாடினார். கடைசிவரை அதனை அவர் திரையுலகில் மெயின்டெயின் செய்தது ஒரு சாதனையே.
எல்லார் ரவி எழுதிய கலீர் கலீர் என்ற நாவலைத் தழுவி இந்தப் படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். மெஜஸ்டிக் ஸ்டுடியோ முத்துக்கருப்ப ரெட்டியார் படத்தைத் தயாரிக்க, இந்திரா பிலிம்ஸ் வெளியிட்டது. முத்துக்கருப்ப ரெட்டியாரின் ஸ்டுடியோவை பிற்காலத்தில் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வாங்கி அதன் பெயரை கற்பகம் என்று மாற்றி படங்கள் தயாரித்தார்.
கே.வி.மகாதேவன் இசையில் மருகதாசி எழுதிய 12 பாடல்களும், அஞ்சலி தேவி, சரோஜாவின் நடனங்களும், டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஆர்.ராதா ஆகியோரின் நடிப்பும் ஆடவந்த தெய்வத்தை வெற்றிப் படமாக்கியது.
1960 ஏப்ரல் 1 இதே நாளில் வெளியான ஆடவந்த தெய்வம் இன்று 63 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema