ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. தரம் பாதி, விளம்பரம் மீதி என்பது வியாபார உலகின் நியதி. இன்றைய நுகர்வு உலகம், தரம் வேண்டாம், விளம்பரமே போதும் என மாறிவிட்டது. பத்து ரூபாய் பாக்குக்கு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கான் மூவரும் இணைந்து விளம்பரம் செய்கிறார்கள்.
இவர்களின் சம்பளமே 100 கோடிகளுக்கு வரும். இந்தியாவில் திரைப்படம் என்பது ஆரம்பகாலம் முதல், வர்த்தகமாகவே இருந்து வந்திருக்கிறது. அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் கலைப்படைப்புகளை உருவாக்குவார்கள். அவை விதிவிலக்கு. 99 சதவீதம் வர்த்தகத்தை நோக்கமாகக் கொண்டே படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்பவை விளம்பரங்கள். படத்தின் பெயரிலிருந்து இது தொடங்குகிறது. மக்களுக்குத் தெரிந்த, அதேநேரம், அட, என்று ஆச்சரியப்பட வைக்கிற பெயராக இருக்க வேண்டும். முன்பு குடியிருந்த கோயில், பாசமலர், தாயை காத்த தனயன் என்று அர்த்தமும், கவித்துவமும் கொண்ட பெயர்களை வைத்தார்கள். இன்று இருட்டு அறையில் முரட்டுக் குத்து, பல்லு படாமப் பார்த்துக்கணும் என்ற ரேஞ்சில் வந்து நிற்கிறது. இந்த இரு படங்களுக்கும் முதல்நாள் குவிந்த கூட்டத்தில் கணிசமானவர்கள், பெயரைப் பார்த்து வந்தவர்கள்.
படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். முன்னணி நட்சத்திரங்கள், மெகா பட்ஜெட் போன்றவை இவர்களுக்கான இலக்குகள். சன் பிக்சர்ஸ் திரைப்பட வர்த்தகத்தில் இறங்கிய போது, நகுல் நடித்தப் படத்தை தனது தொலைக்காட்சிகளில் ஐந்து நிமிடத்துக்கொருமுறை விளம்பரப்படுத்தி, முன்னணி நடிகர்களுக்கு இணையான ஓபனிங்கை திரையரங்குகளில் பெற்றது நினைவிருக்கலாம். முழுக்க விளம்பரத்தால் கிடைத்த வெற்றி அது.
அந்தக்காலத்தில் இன்றைய வசதிகள் இல்லை. 25 பாடல்களை கொண்ட படம் என்று விளம்பரம் செய்வார்கள். அதிக பாடல்கள் இருந்தால் அதிக கௌரவம். மாயஜாலப் படம் என்றால் மந்திர தந்திரக் காட்சிகள் நிறைந்த படம் என்று விளம்பரம் செய்வார்கள். மந்திர தந்திரக் காட்சிகளுக்கென்றே கூட்டம் அலைமோதும். காதுக்கினிய பாடல்கள், கண்ணுக்கினிய காட்சிகள் என்றெல்லாம் விளம்பரங்கள் வரும். எம்ஜி ராமச்சந்திரன் படங்களுக்கு, அதிரடியான வாள் சண்டைகள் நிறைந்த படம் என்று விளம்பரங்கள் வந்ததுண்டு. சிவாஜி படம் என்றால் நவரச நடிப்பை காண வாருங்கள் என்பார்கள்.
எம்ஜி ராமச்சந்திரன், சிவாஜிக்குப் பிறகு இது மாறியது. பெரும்பாலும் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்றோ, தூள்பறக்கும் சண்டைகள் நிறைந்தது என்றோ விளம்பரம் செய்வார்கள். 83 வருடங்களுக்கு முன் அபலை படத்துக்கு செய்த விளம்பரத்தைப் பார்த்தால் அசந்து போவோம். அந்தளவு படத்தின் அனைத்து அம்சங்களையும் ஒரு பிட் நோட்டீஸில் கொண்டு வந்திருந்தார் தயாரிப்பாளர்.
அபலை என்ற படம் 1940 ஆம் ஆண்டு பி.எஸ்.வி.ஐயர் இயக்கத்தில் வெளிவந்தத் திரைப்படம். வசந்தகுமார், பேபி பாப்பா, வி.ஆர்.தனம், சீதாலக்ஷ்மி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர். அப்போது தி.நகரில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா பிலிம்ஸ் அபலையை தயாரித்தது. அந்தக்காலகட்டத்தின் முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இல்லை. சரித்திர, புராண படமும் கிடையாது. பெயரைப் பார்த்தாலே மினிமம் பட்ஜெட் பேமிலி ட்ராமா என்பது புரிந்துவிடும்.
இந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். முக்கியமாக திரையரங்கு முதலாளிகள் படத்தை வாங்க வேண்டும். இவை அனைத்தையும் மனதில் வைத்து விளம்பரம் ஒன்றை செய்தனர். அதில் படநிறுவனம், படத்தின் பெயர், இயக்குநர் பெயர் ஆகியவற்றுடன் படம் குறித்த செய்திகளையும் சேர்த்திருந்தனர். எப்படி...?
பிரபல நட்சத்திரங்கள் படத்தில் இல்லை என்றால், உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த என்று போஸ்டரில் போடுவதை பார்த்திருப்பீர்கள். அதுபோல், அபலைப் படத்திற்கு, அரிய கலை வல்லவர்கள் நடித்தது என விளம்பரம் செய்தனர். சோகம், அன்பு, ஹாஸ்யம், சங்கீதம், சந்தோஷம், அழகு, பக்தி, மயிர்க்கூச்செரியும் சம்பவம், உயரிய நடிப்பு எல்லாம் நிறைந்தது என்று இன்னொரு வாசகம். பாட்டு வேணுமா பாட்டு இருக்கி, பைட்டு வேணுமா பைட்டு இருக்கி என்ற வாரிசு தில் ராஜுவின் அதேவகை விளம்பரம்தான்.
இந்த வருஷம் பூராவும் அபலையைப் பற்றித்தான் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கப் போகிறார்கள் என்று ஒரு குறிப்பு. அத்துடன், இந்தப் படத்தை பார்க்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்று ஒரு மறைமுக சாபம். அபலை யாருக்கான படம்? பொதுவாக ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து வயதினருக்குமான படம் என்பார்கள். அதிலும் அபலை பல அடி முன்னோக்கிப் பாயந்திருந்தது. ஆண், பெண், கிழவர், குழந்தை, ஏழை, செல்வந்தர் எல்லாரும் கண்டு ஆனந்திக்கக் கூடிய படம் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
வயது வித்தியாசத்துடன் பால், வர்க்க வித்தியாசத்தை குறிப்பிட்டு விளம்பரம் செய்த ஒரே படம் அபலையாகத்தான் இருக்கும்.
அன்றும் கவர்ச்சிக்கென்று ஒரு கூட்டம் இருந்திருக்கிறது. அவர்களை மனதில் வைத்து, படத்தைப் பார்க்கப் போகிறவர்கள், தியேட்டர் நாற்காலியில் அப்படியே 'வேர்வை விடுவார்கள்'. அந்தளவு கவர்ச்சிமிக்க படம் என்று ஒரு கிளுகிளு எச்சரிக்கையையும் விட்டிருந்தனர். இவற்றுடன் படத்தின் கதை என்ன என்பதை கோடிட்டுக் காட்டும் ஆறு சம்பவங்களையும் சேர்த்து, கடைசியாக,
'தியேட்டர் முதலாளிகளுக்கு... அபலை என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்.
இதுவரை கண்டிராதவகையில் பெரும் கூட்டத்தைக் கவரவல்ல முதல் தரப்படம். இதை உங்கள் தியேட்டரில் புக் செய்துவிட்டீர்களா? இல்லையெனில் இப்போதே, இன்றே செய்யுங்கள்' என்று ஏறக்குறைய திரையரங்கு உரிமையாளர்களின் சட்டையைப் பிடித்து உலுக்கியிருந்தனர்.
விளம்பரத்தின் இறுதியில் தென், வட ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாக்களின் விநியோகஸ்தர் பெயரும், மைசூர் சமஸ்தானம், தென் கன்னடம் ஜில்லா ஆகிய ஏரியாக்களின் விநியோகஸ்தர் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தன. அபலை வெளிவந்த போது மைசூர் தனி சமஸ்தானமாக இருந்தது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் தனி சமஸ்தானமாகவே இயங்கி வந்தது. இந்திய குடியரசில் கடைசியாக இணைந்த சமஸ்தானங்களில் இதுவும் ஒன்று. அந்தக்காலத்தில் மைசூர், கன்னடப் பகுதிகளிலும் தமிழ்ப் படங்கள் வெளியானதை இந்த விளம்பரம் தெரியப்படுத்துகிறது.
83 வருடங்களுக்கு முன் 1940 ஏப்ரல் 24 இதே நாளில் அபலை வெளியான போது, விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது போல் எதுவும் நிகழவில்லை. படம் பத்தோடு பதினொன்றாக திரையரங்குகளைவிட்டு ஓடியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema