தமிழ் உள்ளிட்ட எந்த மொழி திரைப்படங்களாக இருந்தாலும், அதை பிரபலப்படுத்துவதற்கு பல்வேறு விஷயங்களை படக்குழுவினர் முயற்சிப்பார்கள். படத்தில் உள்ள விஷயங்களை சொல்லி ரசிகர்களை கவர்வதற்காக டிரெய்லர், டீசர்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த டிரைலர் எந்த நாளில் வெளியிட வேண்டும்? எப்போது வெளியிட்டால் ரசிகர்களை சென்றடையும் என்பதெல்லாம் யோசித்து வெளியிடுவார்கள். ஆனால் இன்று ஒரே நாளில் 6 திரைப்படங்களின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமந்தாவின் சாகுந்தலம்
சமந்தா நடிப்பில் தெலுங்கு இயக்குநர் குணசேகரன் இயக்கியிருக்கும் சாகுந்தலம் திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிடுகின்றனர். இதன் காரணமாக அந்தப் படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளனர். மகாபாரதத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்களை எடுத்து சாகுந்தலம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கிறார். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் சாகுந்தலம் திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளது.
ராகவா லாரன்ஸின் ருத்ரன்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ருத்ரன் திரைப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்த Five Star கதிரேசன் இயக்கி, தயாரித்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் ருத்ரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி ருத்ரன் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
யோகி பாபுவின் 'யானை முகத்தான்'
சாகுந்தலம், ருத்ரன் டிரைலர்களை தொடர்ந்து, யோகி பாபு நாயகனாக நடித்திருக்கும் யானை முகத்தான் படத்தின் டிரைலரை வெளியாகியுள்ளது. நகைச்சுவைக்கும், அதே சமயம் சிந்திக்கும் வகையிலும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். இதில் யோகிபாபுவுடன் நகைச்சுவை நடிகர்களான ரமேஷ் திலக் மற்றும் கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் யானை முகத்தான் படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.
சாந்தனுவின் இராவண கூட்டம்
சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இராவண கூட்டம் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஊர், இரண்டு சாதிகள் பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதற்குள் காதல், வீரம், துரோகம் உள்ளிட்ட விஷயங்களையும் திரைக்கதையில் இயக்குநர் இணைத்துள்ளார் என படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். ராவண கூட்டம் டிரைலரும் கவனம் பெற தொடங்கியுள்ளது.
அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே
ஐந்தாவதாக அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் - அச்சம் என்பது இல்லை படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அருண் விஜய், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
யாத்திசை
இந்த படங்களின் டிரைலர்களை தவிர, புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாற்று திரைப்படமான யாத்திசை டிரைலரும் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை தமிழ் சினிமாவின் விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பா.ரஞ்சித், மோகன் ஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட 8 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
ஒரே நாளில் ஆறுக்கும் மேற்பட்ட டிரைலர்கள் வெளியிடுவது சரியான அணுகுமுறையாக இருக்காது என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைலர்கள் வெளியாவதால் சில படங்களின் டிரைலர்கள் மக்களின் கவனத்திற்கு செல்லாமல் தவறும் எனவும் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Arun Vijay, Samantha, Yogi Babu