முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 84 வருடங்களுக்கு முன் வெளியான வள்ளலாரின் புகழ் சொல்லும் ஜோதி..!

84 வருடங்களுக்கு முன் வெளியான வள்ளலாரின் புகழ் சொல்லும் ஜோதி..!

ஜோதி

ஜோதி

வள்ளலாரின் அனைவரும் சமம் என்ற கருத்து சாதிய மேட்டிமைவாதிகளை சினம் கொள்ளச் செய்தது. அவருக்கு எதிராகவும் அவரது சர்வ சமய சன்மார்க்கத்திற்கு எதிராகவும் அவதூறு பரப்பினர். கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர் என்ற வள்ளாரின் கூற்று சாதி, சமய ஏற்றத்தாழ்வுகளுக்கு பதிலடியாக இருந்தது. இதனை சனாதனவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகள் எப்படி தமிழ் இனத்தின் அடையாளமாக உள்ளதோ அதுபோன்று, 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வரிகளும் தமிழ் இனத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. உயிர்களிடத்தில் பேரன்பு கொண்ட வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 1939 இல் ஜோதி என்ற திரைப்படம் வெளியானது.

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1823 அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில் பிறந்தார். இவரது தந்தை இராமையாபிள்ளை, தாய் சின்னம்மையார். அடிகளாருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.

அடிகளாருக்கு சின்ன வயதிலேயே படிப்பில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகச் சிந்தனைகளே அவரை முன்னோக்கிச் செலுத்தின. முருக சன்னிதானத்தில் அவர் மனமுருகிப் பாடியதைக் கேட்ட அவரது உபாத்தியர், லௌகீகக் கல்வி அவருக்குத் தேவையில்லை, அவர் ஒரு தெய்வப்பிறவி என அறிவித்தார்.

அடிகளார் பிறந்த ஆறாவது மாதம் அவரது தந்தையார் மரணித்தார். தாய் குழந்தைகளுடன் சென்னையை அடுத்த பொன்னேரியில் குடியேறினார். பிறகு ஏழுகிணறு பகுதியில் அவர்கள் வசிக்கத் தொடங்கினர். அடிகளாரின் வாழ்வில் அக்கறைக் கொண்டு, அவரை படிக்க வைத்தவர் அவரது அண்ணன் சிதம்பரம் சபாபதி ஆவார். தம்பியின் ஆன்மிக நாட்டத்தை அறிந்த பின் அவர் அவரை கல்வி கற்க வற்புறுத்தவில்லை.

சமூகத்தில் புரையோடிப்  போயிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அடிகளாரை மனவருத்தமடையச் செய்தன. அவர் அனைவரும் சமம் என்ற நோக்கில் உருவாக்கிய தனது மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சன்மார்க்கம் என பெயரிட்டார். அறிவுடமையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தவர் சிதம்பரம் அருகிலுள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867 ஆம் ஆண்டு, மே 23 ஆம் தேதி வடலூர் மக்களிடமிருந்து 80 காணி நிலம் வாங்கி தருமசாலையை நிறுவினார். இங்கு வரும் மக்கள் அனைவருக்கும் மூன்றுவேளை உணவு இலவசமாக அளிக்கப்பட்டது. இந்த அன்னதானம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசு குறைந்த விலைவில் உணவுப் பொருட்கள் வழங்கி வருகிறது.

வள்ளலாரின் அனைவரும் சமம் என்ற கருத்து சாதிய மேட்டிமைவாதிகளை சினம் கொள்ளச் செய்தது. அவருக்கு எதிராகவும் அவரது சர்வ சமய சன்மார்க்கத்திற்கு எதிராகவும் அவதூறு பரப்பினர். கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர் என்ற வள்ளாரின் கூற்று சாதி, சமய ஏற்றத்தாழ்வுகளுக்கு பதிலடியாக இருந்தது. இதனை சனாதனவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

1874 ஜனவரி 30 ஆம் தேதி தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்ட வள்ளலாரை பிறகு எவரும் பார்க்கவில்லை. அவர் ஜோதி வடிவமாகிவிட்டார் என்கின்றனர் அவரை பின்பற்றும் பக்தர்கள். சனாதனிகளால் அவர் எரித்துக் கொல்லப்பட்டதாக பகுத்தறிவாளர்கள் கூறுகின்றனர்.

கொல்லாமை, அனைவரும் சமம், பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்ற கருத்துகளை தமிழ் நிலத்தில் உரக்கப் பேசியவர் வள்ளலார். நாத்திகர்களும் கொண்டாடும் ஆன்மிகவாதியாக அவர் இன்றளவும் இருப்பது அவரது சமூகநீதி கொள்கையால் என்பதை மறுக்க முடியாது. அவரைப் பற்றி 1939 இல் ஜோதி என்ற படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். பம்மல் சம்பந்த முதலியார் இதற்கான கதை, திரைக்கதையை எழுதினார். இராமலிங்க அடிகளாராக கே.ஏ.முத்து பாகவதர் நடித்தார். எம்.ஜி.சக்ரபாணி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்டவர்களும் நடித்தனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இதன் பிரதி தற்போது இல்லை.

பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும், சாதி, மத வேற்றுமைகளை பிரதானப்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பார்க்க, கேட்க, பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை வள்ளலாருடையது. இப்போதுகூட அவரது வாழ்க்கை வரலாறை மறுபடி திரைப்படமாக எடுக்கலாம்.

1939 மார்ச் 16 இதே நாளில் வெளியான ஜோதி திரைப்படம் இன்று 84வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema