டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.
ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்.
உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும். அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குரூப் 4 தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, " தென்காசியில் ஒரு தனியார் மையத்தில் பயிற்சி பெற்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், தேர்வு எழுதியவர்களில் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உரிய விசாரணை நடத்தி தவறு ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் விளக்கம்
இதற்குப் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எந்தவித ஆதாரம் இன்றி எதிர்க்கட்சி தலைவர் பேசி இருக்கிறார். எனவே அந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே நிரூபிக்க வேண்டும் "என்று தெரிவித்தார்.
மேலும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு..? சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ்
பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மனித வள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், " குரூப் 4 தேர்வு குறித்து பொதுவெளியில் வந்த தகவலுக்கும் என்னிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கும் சம்பந்தமே இல்லை. தென்காசியில் மொத்தமே எட்டு மையங்கள் தான் உள்ளது. அதில் முதல் 500 பேரில் 27 பேரும் முதல் 1000 பேரில் 45 பேரும் முதல் பத்தாயிரம் பேரில் 397 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் . 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் , எத்தனை மையங்களை நடத்துகிறார் எங்கு எங்கு நடத்துகிறார் என்பது குறித்து உரிய தகவல் என்னிடம் இல்லை" என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Tamil Nadu Government Jobs, TNPSC