முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 35 வயது கடந்து அரசு வேலைக்காக காத்திருக்கிறோம்... குரூப் 4 காலியிடங்களை இன்னும் உயர்த்துக.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கோரிக்கை

35 வயது கடந்து அரசு வேலைக்காக காத்திருக்கிறோம்... குரூப் 4 காலியிடங்களை இன்னும் உயர்த்துக.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கோரிக்கை

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வு

கொரோனா காலகட்ட சூழ்நிலையில் படித்து பல்வேறு அவமானங்களை சந்தித்து 35 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் அரசு வேலைக்காக காத்திருக்கும் கிராமப்புற ஏழை தேர்வர்களுக்கு தமிழக அரசு நல்வழிகாட்டி உதவி செய்ய வேண்டும்.

  • Last Updated :

TNPSC குரூப் 4 காலிப் பணியிடங்களை மேலும் உயர்த்த கோரி தமிழக முதல்வருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இருப்பினும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில், மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எண்ணிக்கையை மேலும் உயர்த்தவேண்டும் என டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடித்ததில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக அரசின் பல்வேறு துறைகள் வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்,பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 7138 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. 21.3.2023 அன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் காலிப் பணியிடங்களை 10,117-ஆக உயர்த்துவதாக அறிக்கை வெளியிட்டது.

ஆண்டுக்கு சுமார் 10,000 காலி பணியிடங்கள் வரை நிரப்பி வந்த TNPSC குரூப் 4 தேர்வு 2022-ல் மூன்று ஆண்டுகளுக்கு (2020,2021,2022)பின்பு நடத்தப்பட்டு 10,117 காலிப்பணியிடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டிருந்தால் 2019க்கு பிறகு சுமார் 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கலாம். ஆனால் அதில் 1/3 பணியிடங்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட்: கட் ஆஃப் மதிப்பெண்கள் என்ன?

எனவே தமிழக அரசு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை முறையாக கேட்டறிந்து குறைந்தபட்சம் 15,000 காலிப் பணியிடங்களை இந்த குரூப்-4 தேர்வுடன் இணைக்கப்பட வேண்டும். கொரோனா காலகட்ட சூழ்நிலையில் படித்து பல்வேறு அவமானங்களை சந்தித்து 35 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் அரசு வேலைக்காக காத்திருக்கும் கிராமப்புற ஏழை தேர்வர்களுக்கு தமிழக அரசு நல்வழிகாட்டி உதவி செய்ய வேண்டும்.” என அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

First published:

Tags: Group 4, TNPSC