முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மத்திய அரசில் 5,000 காலியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே... தேர்வில் சொல்லி அடிக்கலாம்..!

மத்திய அரசில் 5,000 காலியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே... தேர்வில் சொல்லி அடிக்கலாம்..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பெரும்பாலான பணியிடங்கள், மெட்ரிக் பள்ளி நிலையை (Matriculation) முடித்திருந்தால் போதும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

Govt jobs: குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. இதில், பெரும்பாலான தேர்வர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடுத்த தேர்வு அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும். இதன்காரணமாக,  சில அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்வதாக தெரிவித்து வருகின்றனர்.

அரசுப்பணி ஒன்றையே நீங்கள் கனவாகக் கொண்டிருந்தால், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளைத் தாண்டி எஸ்.எஸ்.சி (SSC), ரயில்வே (RAILWAY), வங்கி (BANKING) மத்திய (UPSC), இராணுவம் (DEFENCE) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும்  தயாராகலாம்.

முன்னதாக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,369 பணியிடங்களுக்கான அறிவிப்பை  (SSC - ADVERTISEMENT NO. Phase-XI/2023/Selection Posts) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டது. இதற்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன்  (மார்ச் 27) தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், கிட்டத்தட்ட 100 வகைமைகள் பட்டப்படிப்பு (Graduation and Above) நிலையிலும், 169 வகைமைகள் (10+2 Higher Secondary ) மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் (Matriculation) நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்ப செயல்முறை மார்ச் 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாளை  நள்ளிரவு 11 மணி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும். ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

கட்டாயம் வாசிக்க: TNPSC Group 4 Results: குரூப் 4 பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்? உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

கணினி மூலம்  நடைபெறும் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். தெற்கு மண்டலத்தில் கணினி மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு 2023 ஜுன் - ஜுலை மாதங்களில், 22 மையங்களில் / நகரங்களில் நடைபெறுகிறது. அதாவது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11 மையங்ளிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 இடங்களிலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறுகின்றன. பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பம் செய்வது எப்படி ஆகியவை SSC விளம்பர அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விளம்பர அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

இந்த எஸ்எஸ்சி போட்டிட்த்  தேர்வில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள்.  அதேபோன்று, தமிழ்நாட்டு ஆதிதிராவிட / பழங்குடியின இளைஞர்கள் இந்த எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் விதமாக இலவச பயிற்சி வகுப்பை தாட்கோ அறிவித்துள்ளது.

First published:

Tags: Central Government Jobs, Jobs, Recruitment