ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நேரடிப் பணி நியமனம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம், இன்னுமொரு போட்டித் தேர்வு மூலம் பணி நியமனம் செய்யும் அரசாணை எண் 149 ஐ அமல்படுத்தத் துடிக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே 12/02/2022 அன்று, தமிழக பாஜக சார்பில், ‘நீட் தேர்வுக்கு மறுப்பு ஆனால் டெட் தேர்வுக்கு விருப்பு’ என்ற தலைப்பிட்ட அறிக்கையில், ஆசிரியர் பணி நியமனங்களில் திமுகவின் இரட்டை வேடம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தோம். தற்போது, பள்ளிக் கல்வித் துறை ஆணையர், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியாக இருந்து போது, அரசாணை எண் 149 ஐக் கடுமையாக எதிர்த்த திமுக, தனது தேர்தல் வாக்குறுதி எண் 177 ல், 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வாக்களித்த மக்களுக்கு வழக்கம்போல துரோகத்தையே செய்ய முற்படுகிறது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்துக்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்த நிலையில், இன்னும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி என்பது, இளைஞர்களின் இத்தனை ஆண்டு கால காத்திருப்பையும், நம்பிக்கையையும் அடியோடு சீர்குலைக்கும் செயல் ஆகும். அது மட்டுமல்லாது, இந்தத் தகுதித் தேர்வானது பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பணி நியமனம் இருக்குமா அல்லது போட்டித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பணி நியமனம் இருக்குமா? எதன்படி தர வரிசை நிர்ணயிக்கப்படுகிறது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களுக்கான அடுத்த வாய்ப்பு என்ன? போட்டித் தேர்வு முடிவுகளின் தரவரிசை வெளிப்படையாக அறிவிக்கப்படுமா அல்லது திமுக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் செய்வதற்காக இதைப் பயன்படுத்த நினைக்கிறதா? என்கிற கேள்விகள் ஆசிரியர் தகுதி பெற்ற இளைஞர்கள் மத்தியில் பூதாகாரமாக எழுந்திருக்கின்றன. அரசு ஆசிரியர் பணிக்காக, தங்களின் அத்தனை ஆண்டு காலக் காத்திருப்பையும், போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் வீணடித்திருக்கிறது என்று வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இன்னுமொரு போட்டித் தேர்வை நடத்தி தகுதி வாய்ந்த இளைஞர்களை வஞ்சிக்காமல், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நேரடிப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும், போட்டித் தேர்வைப் பரிந்துரைக்கும் அரசாணை எண் 149 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசுப் பணிகளுக்காக வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலையைக் களைய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு, அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.