முகப்பு /வேலைவாய்ப்பு /

அம்பேத்கர் தொழில் சாம்பியன் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி.. செங்கல்பட்டு ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு!

அம்பேத்கர் தொழில் சாம்பியன் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி.. செங்கல்பட்டு ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Annal Ambedkar Business Champion Scheme : எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோருக்கெனப் பிரத்யேக சிறப்புத் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற்று பயன்பெற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

அரசு செயல்படுத்தி வரும் தொழில்முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுதொழில்முனைவோரின் பங்கு குறைவாயிருப்பதை அடுத்து, தமிழக அரசு, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோர்க்கெனப் பிரத்யேக சிறப்புத் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில்முனைவோர் – பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தினை Annal Ambedkar Business Champion Scheme அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில்முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடிணைந்த மானியம் வழங்கப்படும்.

அது உணவுப்பதப்படுத்தல், உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தைத்தல், மளிகைக் கடை, வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், நகரும் அலகுகள் கொண்ட ட்ரேவல்ஸ், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெஃப்ரிஜரேட் ட்ரக் உள்ளிட்ட எந்தத் திட்டமாகவும் இருக்கலாம். இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் உதவி வழங்கப்படும்.

35% மானியம்:

மானியம் மொத்த திட்டத் தொகையில் 35% ஆகும். மானிய உச்ச வரம்பு ரூ.1.5 கோடி. இதுவன்றி, கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில்முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.

எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவைச் சேர்ந்த எந்தத் தனி நபரும் மற்றும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்களின் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, ஒரு நபர் கம்பனி, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

தகுதிகள் என்ன?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு சட்டப்படியாக வரையறுக்கப்பட்டதல்லாமல் வேறெந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65% வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

இலவச பயிற்சி:

தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் https://www.msmeonline.tn.gov.in/ என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில்முனைவோர்க்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்டத் தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்புப் பாலமாகவும் மாவட்டத் தொழில் மையம் விளங்கும்.

தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி & எஸ்.டி தொழில்முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலான விவரங்களை பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், எண்.6, ஏகாம்பரனார் தெரு, வேதாச்சலம் நகர், செங்கல்பட்டு – 604 001 அலுவலகத்தினை நேரடியாகவோ, 044-29995351, 044-27427911 தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Local News, Money18