முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே... கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்புகள்... அரசின் மானியம், உதவிகளை தெரிஞ்சுக்கோங்க...!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே... கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்புகள்... அரசின் மானியம், உதவிகளை தெரிஞ்சுக்கோங்க...!

காட்சிப் படம்

காட்சிப் படம்

யாரிடம் கைகட்டி சேவகம் செய்ய விருப்பமில்லை என்று நீங்கள் நினைத்தால், மிகச்சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கி மேனிலை நோக்கிய ஒரு பயணத்தைத் தொடங்கலாம்

  • Last Updated :
  • Tamil Nadu |

குரூப் 4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. வெறும் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். அதாவது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஆட்சேர்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விகிதம் (Selection Rate: Total Job position/ total job applicant) 0.005% ஆக உள்ளது. இதுதவிர,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன் பதிவு செய்துவிட்டு கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும்,  2023 ஆம் ஆண்டில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்றும் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அறிவிப்பது, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு என ஒட்டுமொத்த நடைமுறைகளும் நடைபெற்று பணி நியமன ஆணையை பெறுவதற்கு 2025 ஆகி விடலாம்.

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பெரும்பாலானோர் வேலையற்றவர்களாக நீண்ட காலமாக இருக்கின்றனர். இத்தைகைய வேலைவாய்ப்பின்மை தனிநபரை மட்டுமல்லாமல் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் மிகுந்த  சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. செல்வமுடையவர்கள் இத்தகைய நீண்டகால வேலையிழப்பை தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், நடுத்தர மற்றும் சமூக அடிநிலை மட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு இது பெரும் சுமையாகி விடுகிறது.

எனவே, எதிர்வரும் காலங்களில் முழுநேரமாக டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வுக்கு தயாராகி வருபவராக இருந்தால், தொலைதூரக் கல்வி மூலம் சான்றிதழ் பெறுவது, கணினி , தட்டச்சு சான்றிதழ் பெறுவது, ஆங்கில அறிவை வளர்ப்பது, பகுதி நேர வேலை மூலம் வருவாய் ஈட்டுவது போன்ற கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.

உங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய மற்றவர்களை சார்ந்திருக்கும் பட்சத்தில் ஏதேனும் பகுதி நேர வேலையில் ஈடுபட்டுக் கொண்டே அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். யாரிடம் கைகட்டி சேவகம் செய்ய விருப்பமில்லை என்று நீங்கள் நினைத்தால், மிகச்சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

தொழில் முனைவோர்: தொழில் என்பது பெரிய கட்டடங்களும், அலுவலக கட்டமைப்பும், பெரும் பொருட்செலவும் கொண்டது அல்ல. நமக்குப் தெரிந்த தொழில் யுக்திகளை கொண்டு, எளிமையாக வீட்டில் இருந்து கொண்டு கூட பணம் சம்பாதிக்க முடியும். சுருங்க சொன்னால், ஒரு தொழிலை தொடங்கி அதனை திறம்பட நிர்வகிப்பவரே தொழில் முனைவோர் ஆவார்.

தொழில்முனைவோரின் வளர்ச்சிக்காக மத்திய / மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், சிலவற்றை இங்கே காண்போம்.

தாட்கோ இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆதிதிராவிடர் / பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் (Self Employment Programme for Youth (SEPY) கீழ் படித்த, வேலையற்ற இளைஞர்கள் தாட்கோ நிறுவனத்திடம் இருந்து ரூ.2.25 லட்சம் வரை தொழில் மானியம் பெற்று வருவாய் ஈட்டும் தொழிலை மேற்கொள்ளலாம். இதற்கான  விண்ணப்பம் இலவசமாக மாவட்ட மேலாளர்கள் அலுவலகத்தில் வழங்கப்படும் அல்லது தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முத்ரா கடன்:  கடந்த 2015ம் ஆண்டு குறுசிறு நிறுவனங்களுக்கான முத்ரா கடன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சிறிய அளவிலான உற்பத்தி நிறுவனங்கள், வணிகர்கள், வாடகை வண்டி நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள், கைவினை கலைஞர்கள் போன்றவர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.50,000/- வரையிலான கடன்களுக்கு, முத்ரா சிஷூ கடன் பிரிவின் கீழும், ரூ.50,000-க்கும் மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு முத்ரா கிஷோர் கடன் பிரிவின் கீழும், ரூ. 5 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு முத்ரா தருண் கடன் பிரிவின் கீழும் கடன்கள் வழங்கப்படுகின்றன.

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP): 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), வேளாண் அல்லாத துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் அளிக்கிறது.

உற்பத்தி சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.50 லட்சம் வரையும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.20 லட்சம் வரையும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எந்தவித கல்வித் தகுதியும் தேவை இல்லை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. இருப்பினும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய உற்பத்தித் திட்டங்கள் மற்றும் ரூ.5 இலட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுப்போர் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓபிசி/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள்/சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு ஒட்டுமொத்த திட்டத் தொகையில் 25% (நகர்ப்புறங்களுக்கு), 35% (கிராம புறங்களுக்கு) மானியமாக வழங்கப்படும். அதவாது, 50 லட்சம் திட்டம் மதிப்பீட்டில், கிட்டத்தட்ட 17.5 லட்சம் ரூபாயை மானியமாக அரசு செலுத்தும், இதர தொகையை வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

பயன் பெற விழைவோர் விண்ணப்பிக்க kviconline.gov.in/pmegpeportal/ என்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன்:  சிறுபான்மையினர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (national minority development finance corporation) கடந்த 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த கழகம், சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கழகத்தின், மாநில முகமையாக (State Channelising Agency) தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ - TAMCO) செயல்பட்டு வருகிறது.

தேசிய கழகத்திடம் இருந்து டாம்கோ நிறுவனம் கடன் நிதியைப் பெற்று, மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையினர் மக்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது.

டாம்கோ செயல்படுத்தும் முக்கியத் திட்டங்கள் என்ன?  

தனிநபர் காலக்கடன் திட்டம் (Individual Term loan Scheme): 

சுயமாக தொழில் தொடங்க / வியாபாரம் மேற்கொள்ள விரும்பும்   பொருளாதாரத்தில்  பின்தங்கியுள்ள  சிறுபான்மையினர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

கடன் தொகைவட்டி விகிதம்ஆண்டு வருமான உச்ச வரம்பு
திட்டம் 1: ரூ.20 லட்சம் வரையிலான கடன்களுக்கு6%கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய்
திட்டம் 1: ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்குஆண் 8%பெண் 6%திட்டம் 1-ன் கீழ் பயன்பெறமுடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை கொண்டவர்கள்

கைவினை கலைஞர் திட்டம்: 

சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் குறைந்த வட்டி விகிதத்தில், மூலப்பொருட்கள் / உபகரணங்கள் /இயந்திரங்கள் / கருவிகள் வாங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படுகிறது.

கடன் தொகைவட்டி விகிதம்ஆண்டு வருமானம் உச்சவரம்பு
ரூ.10 லட்சம் வரைஆண் - 5%பெண் - 4%கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய்

 சிறுபான்மையினர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவித் திட்டம்:  

ஆண் மற்றும் பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலகாரக்கடை, காலணி விற்பனை செய்தல், சிற்றுண்டி, ஜவுளி வியாபாரம், ஊறுகாய் மற்றும் அப்பளம் தயாரித்து விற்பனை செய்தல், கூடை பின்னுதல் போன்ற சிறு வியாபாரம் செய்து தங்களின் பொருளாதாரத்தினை உயர்த்திட, சிறுகடன் வழங்கும் திட்டம் மூலம் பின்வருமாறு கடன் வழங்கப்படுகிறது

கடன் தொகைவட்டி விகிதம்ஆண்டு வருமான உச்ச வரம்பு
திட்டம் 1: ரூ.1 லட்சம் வரையிலான கடன்களுக்கு7%கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய்
திட்டம் 1: ரூ.1.5 லட்சம் வரையிலான கடன்களுக்குஆண் -10%பெண் -8%திட்டம் 1-ன் கீழ் பயன்பெறமுடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை கொண்டவர்கள்

எனவே, உங்கள் அருகில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும், விவரங்களுக்கு National minority development finance corporation  

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் : கலாஸ் மகால் பாரம்பரியக் கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 ஆகும்.

First published:

Tags: Entrepreneurship, Tamil Nadu Government Jobs, TNPSC