உலக அளவில் கடந்த ஆண்டு முதலே தொழில்நுட்ப நிறுவனங்களின் (IT) பணியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். முன்னணி நிறுவனங்களான டிவிட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் போன்றவை இந்த நடவடிக்கையை தொடங்கி வைத்த நிலையில், அதன் தாக்கம் இந்தியாவில் உள்ள நிறுவனங்களிலும் கூட எதிரொலித்தது.
அண்மையில் 19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அசெஞ்சர் நிறுவனம் அறிவித்தது. அதேபோல, மேலும் பல நிறுவனங்கள் ஊழியர்களை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றன. கொரோனா காலங்களில் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை பணியமர்த்தியது, சிறுகுறு பொருளாதாரச் சரிவுகள் போன்றவை இவர்களின் பணிநீக்க நடவடிக்கைக்கு காரணமாக கூறப்பட்டது.
அதே சமயம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக ஹெச்சிஎல் டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை யாருக்கு பலன் அளிக்கும் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியர்களுக்கு பலனில்லை : ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக ஹெச்சிஎல் நிறுவனம் அறிவித்துள்ள போதிலும் அதனால் இந்தியர்களுக்கு பலன் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் பணியாளர்களை ரோமானியா நாட்டில் இருந்து தேர்வு செய்ய இருப்பதாக ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரோமானியா நாட்டில் தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியை ஹெச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து ரோமானியா நாட்டின் ஹெச்சிஎல் தலைவர் லூலியன் படுராரூ கூறுகையில், “ரோமானியாவில் உள்ள உள்ளூர் திறமைசாலிகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
ரோமானியா மாணவர்களுக்கு பயிற்சி
ரோமானியா மாணவர்களை பணியில் சேர்ப்பதற்கு முன்னதாக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், தொடக்க நிலை தொழில்நுட்பப் பணிகளில் பணியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் உதவி ஆலோசகர் அலெக்சேந்திரா சீமியோன் கூறுகையில், “ரோமானியா நாட்டின் சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக ஹெச்சிஎல் செயல்பட்டு வருகிறது. உள்ளூர் பணித் திறன்களை பயன்படுத்திக் கொண்டு அந்த நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி அடையும் என்றும், தொழில்நுட்ப சேவைகள் விரிவடையும் என்றும் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
இதற்கிடையே பூகாரெஸ்ட் நாட்டிலும் நிறுவனத்தை விரிவுபடுத்தி, அங்கும் உள்ளூர் திறமையாளர்களை பணியமர்த்துவதற்கு ஹெச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.