முகப்பு /செய்தி /கல்வி / மாநில கல்விக் கொள்கை: அறிக்கை வழங்க கால அவகாசத்தை நீட்டித்த தமிழ்நாடு அரசு

மாநில கல்விக் கொள்கை: அறிக்கை வழங்க கால அவகாசத்தை நீட்டித்த தமிழ்நாடு அரசு

மாநில கல்விக் கொள்கை

மாநில கல்விக் கொள்கை

குழுவின் செயல்பாடுகள் குறித்து அரசு முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், மேலும் இரண்டு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதாக முடிவெடுத்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu |

மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான உயர்மட்டக் குழுவின் கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், கூடுதலாக இரண்டு புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமானதொரு மாநிலக் கொள்கையை வடிவமைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது.

12 நபர்கள் அடங்கிய இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் (அதாவது 2023 மே மாத இறுதிக்குள்) தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்மட்டக் குழுவின் கால அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பதாகவும், அதன்படி குழு தனது அறிக்கையை 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் அளிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், பல்வேறு பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைக்கு பிறகு ஆணையத்தால் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என்று அரசு தெரிவித்துளளது.

மேலும், குழுவின் செயல்பாடுகள் குறித்து அரசு முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், மேலும் இரண்டு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதாக முடிவெடுத்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி, முதல்வர் (ஓய்வு) டி. ஃப்ரீடா ஞானராண, சென்னைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் மற்றும் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் ஜி. பழனி  ஆகியோர் புதிய  உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

முன்னதாக, வெளிப்படைத் தன்மை மற்றும் உள்ளடங்கிய அணுகுமுறை இல்லாத காரணத்தினால் பேராசிரியர் ஜவகர்நேசன் குழுவின் உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அரசு அதிகாரிகளின் தலையீடு அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், குழுவில் ஏனைய சில உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்திருந்தனர்.

top videos

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’அரசு துறைகளுடன் நடந்த கலந்துரையாடல்கள் மிகவும் வெளிப்படையான முறையில் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. எவ்விதத்திலும் அரசு குழுவின் செயல்பாடுகளில் அதிகாரிகளின் தலையீடு இருக்கவில்லை. குழு முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Department of School Education, Higher education, New Education Policy