நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடைபெற்றது. சரியாக 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீட் தேர்வையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது மாணவியின் உள்ளாடையை சோதனை செய்ததால் அவர் தர்ம சங்கடத்துக்குள்ளானார். இதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் இதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல் என்றும் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். கலாச்சாரமும், பண்பாடும் போற்றி பாதுகாக்கப்படும் தமிழ்நாட்டில் இத்தகைய இழிவான செயல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மாணவியின் உள்ளாடையை அகற்றியது மிகப்பெரிய வன்முறையும், மனித உரிமை மீறலும் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் அந்த மாணவியை கடுமையாக பாதித்திருக்கும். அவரால் அவரது முழு கவனத்தையும் செலுத்தி தேர்வு எழுதியிருக்க முடியாது. நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகளின் நோக்கம் மாணவ, மாணவியர் முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத் தான். தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் கவனமாக இருந்தாலே எத்தகைய முறைகேட்டையும் தடுக்க முடியும். அதை விடுத்து உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு நடத்தப்படும் வெடிகுண்டு சோதனையைப் போல மாணவ, மாணவியரை கொடுமைப்படுத்துவதை மன்னிக்க முடியாது.
இதையும் வாசிக்க: அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்... 600/600 மதிப்பெண் பெற்று சாதித்த தச்சுத் தொழிலாளி மகள்
நீட் தேர்வுக்கான சோதனையின் போது மாணவிகள் இழிவுபடுத்தப்படுவது இது முதல்முறையல்ல. 2017-ஆம் ஆண்டிலிருந்து இவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2017-ஆம் ஆண்டில் கேரளத்தின் கண்ணூரில் ஒரு மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்டது. இப்போது தமிழ்நாட்டிலும் அத்தகைய அவலம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ) தமிழக அரசு புகார் தெரிவிப்பதுடன், இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்துவதற்கும் ஆணையிட வேண்டும். மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dr Ramadoss, Neet, Neet Exam