தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் எடுக்க வேண்டிய தகுதி மதிப்பெண்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% சலுகை வழங்குவதற்காக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் இயற்கைக்கு முரணாகவும், சமூகநீதிக்கும் எதிராகவும் அமைந்திருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கான விதிகளை மாநிலங்களின் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுத்த வேண்டும் என்பதைக் கூட அறியாமல் பல்கலைக்கழகம் கட்டுப்பாடு விதிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும்!
முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் எடுக்க வேண்டிய தகுதி மதிப்பெண்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% சலுகை…
— Dr S RAMADOSS (@drramadoss) May 20, 2023
யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் 27.08.2018-ஆம் நாளிட்ட 325 எண் கொண்ட அறிவிக்கையின்படி, முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற 50% மதிப்பெண்களுக்கு மாற்றாக, பட்டியலினத்தவர்/பழங்குடியினர்/ பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45% மதிப்பெண் எடுத்தால் போதுமானது.
இந்த அறிவிக்கையின்படி மாணவர் சேர்க்கையில் 5% மதிப்பெண் சலுகை வழங்க ஒப்புக்கொண்டுள்ள தமிழ்நாட்டு விளையாட்டுப் பல்கலைக்கழகம், அந்த சலுகை பெற வேண்டுமானால் தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள் ஆகியோர் அவர்களின் நிரந்தர சாதிச் சான்றிதழைக் காட்டினால் போதாது என்றும் ஓபிசி சான்றிதழைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறது. இது சமூக அநீதி.
இதையும் வாசிக்க: பள்ளி மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
யு.ஜி.சி அறிவிக்கையில் இடம்பெற்றுள்ள ஓபிசி என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவு மத்திய அரசின் கல்வி/வேலைவாய்ப்புக்கு மட்டுமே பொருந்தக் கூடியது. தமிழ்நாடு அரசின் கல்வி/வேலைவாய்ப்புகளில் ஓபிசி என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவு இல்லை; பி.சி, பி.சி(முஸ்லீம்), எம்.பி.சி, சீர்மரபினர் ஆகியவை தான் உள்ளன; இவை அனைத்தும் ஓபிசி பிரிவுக்கு இணையானவை. இதை உணராமல் தமிழக அரசுக்கு சொந்தமான விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் சலுகை பெற ஓபிசி சான்றிதழ் கோரப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ஓபிசிக்கு இணையான பி.சி, பி.சி(முஸ்லீம்), எம்.பி.சி, சீர்மரபினர் ஆகிய பிரிவினருக்கான சாதிச் சான்றிதழை தாக்கல் செய்வோருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்.
இதையும் வாசிக்க: மாநில கல்விக் கொள்கை: அறிக்கை வழங்க கால அவகாசத்தை நீட்டித்த தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் நிலை இப்படி என்றால், தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான பிற பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவற்றில், முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில், யு.ஜி.சி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகையே வழங்கப்படுவதில்லை.
இது சமூகநீதியை முற்றிலும் மறுப்பதாகும். இந்த நிலையை மாற்றி முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கும்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: OBC Reservation, Ramadoss, Reservation