பன்னிரண்டாம் வகுப்பு என்றாலே பல குடும்பங்களில் சவாலான நாட்கள் தான். அதிலும் தினசரி வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் தெருவோரத்தில் குறுகிய வீட்டில் வசிப்பவருக்கு சொல்லவே வேண்டாம். அப்படியான சூழலில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்கள் பெற்றோருக்கும் பகுதியினருக்கும் பெருமை சேர்த்துள்ளார் சென்னையை சேர்ந்த மோனிஷா.
சென்னை வால் டாக்ஸ் சாலை, பிள்ளையார் கோயில் தெருவில் 5 அடிக்கு 6 அடி அளவு மட்டுமே உள்ள தகர வீட்டில் தலைமுறைகளாக வசித்து வரும் மோனிஷா, பன்னிரண்டாம் வகுப்பில் தனியார் பள்ளியில் படித்து வரலாற்று பாடப்பிரிவில் 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்த அவருக்கு, சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியான அவரது தாய் உறுதுணையாக இருந்துள்ளார். மிகவும் சிரமத்துக்கு ஆளாகியே தான் படித்ததாகவும் பல நேரங்களில் பள்ளியிலேயே படித்து முடித்து விடுவதாகவும் தெரிவித்தார்.
"மழை வரும், வெயில் தாங்க முடியாது, பிரதான சாலைக்கு அருகில் இருப்பதால் விபத்துகள் ஏற்படும், மின் வசதி அடிக்கடி துண்டிக்கப்படும், எனவே அதிகாலை எழுந்து படிப்பேன். எங்கள் பகுதியில் பலரும் கூலி தொழில் செய்பவர்கள். நிறைய கஷ்டத்தில் தான் படிக்கிறார்கள். எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என ஆசை. தெருவோரத்தில் இருப்பவர்களுக்கு அரசு வீடு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.
பாடத்தில் சுட்டியாக இருக்கும் மோனிஷா கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். பொதுத் தேர்வு மற்றும் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் பயிற்சி தொடர முடியாத சூழல் இருந்ததாகவும் தற்போது மீண்டும் கிரிக்கெட் பயிற்சியில் இறங்க போவதாகவும் தெரிவிக்கிறார். "2019ல் தெருவோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக லண்டன் லார்ட்ஸ் கிரவுண்ட் -ல் விளையாடினோம். ஊரடங்கு காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியவில்லை" என்கிறார்.
இதையும் படிங்க; இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி... 591 மதிப்பெண்கள் எடுத்து சாதனை!
தன் மகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் தான் ஹாப்பியாக இருப்பதாக அவரது தாய் குட்டியம்மாள் கூறுகிறார். தங்கள் குடும்பத்திலேயே எவரும் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றதில்லை என்று பெருமிதமாக கூறுகிறார். சென்னை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியான தனக்கு விடுப்பு இல்லாமல் மாதம் முழுவதும் பணி செய்தால் ரூபாய் 13,000 கிடைக்கும் என்றார். மகளை கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தன்னிடம் பொருளாதாரம் வசதி இல்லை என்பதால் தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th Exam results