திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் சிட்டுக்குருவியை பாதுகாத்து வருகின்றனர்.
பறவை மனிதர்
தற்போதுள்ள நவீன காலத்தில், மனிதர்களுக்கே வீடு இல்லாத சூழலில் சிட்டுக்குருவிக்காக மரப்பலகையை கொண்டு கூடுகளை அமைத்து சிட்டுக்குருவியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளார் திண்டுக்கல் கரிசல்பட்டியை சேர்ந்த அலோன் ராஜ்.
ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் திண்டுக்கல்லில் மட்டும் தினந்தோறும் சிட்டுக்குருவி தினம் தான் என்று கூறும் அளவிற்கு, கரிசல்பட்டியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் தங்களது வீடுகளில் குருவி கூடு வைத்திருப்பது ஆச்சரியமூட்டுவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : இந்த ஆண்டு கோத்தகிரி காய்கறி கண்காட்சியில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சிட்டுக்குருவி நம்பிக்கை
பொதுவாக சிட்டுக்குருவிகளில் தேன் சிட்டு, பாக்கு சிட்டு, வாலாட்டி சிட்டு, வானம்பாடி சிட்டு, அடைக்காலங்குருவி, கம்பிவால் சிட்டு என பல்வேறு வகைகள் இருக்கின்றன. மேலும், சிட்டுக்குருவி வீடுகளில் கூடு கட்டினால் குடும்பத்தில் தலைமுறைகள் தலைதூக்கும் என்கிற நம்பிக்கையும் இந்த கிராமவாசிகளின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களிலும் நகரங்களிலும் சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த குருவிகளின் கூட்டத்தை இன்று காண முடியவில்லை. இதற்கு காரணம் தற்போது அனைவராலும் பயன்படுத்தப்படும் அலைபேசியின் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போது விவசாய விளைநிலங்களில் கூட பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் சிட்டுக்குருவியின் உணவுகள் மற்றும் பூச்சிகள் அழிந்து வருகின்றன.
சிட்டுக்குருவிகளை ஈர்த்த தண்ணீர்
இதனால் 13 ஆண்டுகள் வாழக்கூடிய சிட்டுக்குருவிகள் வெறும் 6 ஆண்டுகளுக்குள் இறந்துவிடும் சூழ்நிலை உருவாவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டியைச் சேர்ந்த அலோன் ராஜ் என்பவர் வீட்டில் 8 வருடங்களுக்கு முன்னர் இயல்பாகவே சிட்டுக்குருவிகள் தினசரி வருவதை கண்காணித்து பொழுதுபோக்காக தினமும் அந்த சிட்டுக்குருவிகளுக்கு தண்ணீர் வைத்துள்ளார்.
இதனால் அவரது வீட்டிற்கு தினமும் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் வருவது வழக்கமாகியுள்ளது. இந்த சூழலில் சிட்டுக்குருவி இனம் அழிவை நோக்கி செல்வதை அறிந்த அலோன் ராஜ் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆசையுடன் சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் திணை, வரகு, கம்பு போன்ற உணவுகளை தினசரி இரையாக கொடுக்க ஆரம்பித்தார்.
சிட்டுக்குருவி கூடு
மேலும் சிட்டுக்குருவிகள் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சுமார் 15 முதல் 20 அடி நீளம் உள்ள மூங்கில் மரத்தில் கனுவிற்கு ஒரு கூடு என துளையிட்டு குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வசதிகளும் செய்து வைத்தார். இதேபோல் பல மூங்கில் மரங்களில் சிட்டுக்குருவி தங்குவதற்கு வசதியாக துளையிட்டு அப்பகுதி மக்கள் வாழும் பொது இடங்கள் கடைகள் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இலவசமாகவே செய்து கொடுத்துள்ளார். இதேபோல் மரப்பலகையால் ஆன வீடு போன்ற அமைப்புள்ள சிறிய அளவிலான குருவிக் கூட்டை செய்து ஊரில் உள்ள பல வீடுகளின் வாசலிலும் வைத்திருக்கிறார்.
குழந்தை போல் பாதுகாக்கின்றனர்
பொதுவாக பறவைகள் வீட்டில் மேல் அமர்ந்து எச்சம் இடுவது இயல்பான ஒன்றாகும். இதனால் வீட்டு உரிமையாளர்கள் பறவையை விரட்டியடிப்பது வழக்கம். ஆனால் கரிசல்பட்டி பொதுமக்கள் அவ்வாறு செய்யாமல் தங்களது வீடுகளில் சிட்டுக்குருவியும் ஒரு குழந்தை போல் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து கரிசல்பட்டியைச் சேர்ந்த அலோன்ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கூறுகையில், “கடந்த 8 வருடமாக சிட்டுக்குருவிகளை பராமரித்து வருகிறோம். சிட்டுக்குருவியின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் கூடுகளை செய்து ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக கொடுத்து வருகிறோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க : 'தண்டட்டி போடலனா திட்டுவாங்க' திண்டுக்கல் பாட்டி அசத்தல் பேச்சு!
இலவசமாக வழங்கிய நல்ல உள்ளம்
மேலும் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தன்னிடம் வந்து சிட்டுக்குருவி கூடு வாங்கிச் செல்வதாகவும், ஆண்டிற்கு 50 முதல் 60 கூடுகள் உலக சிட்டுக்குருவி தினத்தன்று பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதாகவும் அலோன் ராஜ் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல், நாட்டிலுள்ள அனைவரும் சிட்டுக்குருவியினத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று கூறிய அலோன் ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள், சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு சிட்டுக்குருவி இனத்தை முற்றிலும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Birds, Dindigul, Local News