திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு என அழைக்கப்படும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் சுற்றுலா பயணிகளுக்காகவே ஏற்படுத்தப்பட்ட இந்தியாவில் பாரம்பரிய "ஏ" கிரேட் ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.
தென்னிந்தியாவில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல், மூணாறு, இடுக்கி, தேக்கடி, கம்பம் மற்றும் தேனி திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு வெளிநாடுகள், வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்ல வசதியாக உள்ள கொடைரோடு இரயில் நிலையத்தில் கொரோனா காலத்திற்கு முன்புவரை விரைவு, அதிவிரைவு, சிறப்பு ரயில்கள் உட்பட 23 ரயில்கள் நிறுத்தப்பட்டன.
கொரோனா தடைகாலம் முடிந்து இயல்பு நிலை திரும்பி, தற்போதுவரை வெறும் மூன்று ரயில்கள் மட்டுமே நிறுத்தபடுவதால் இந்த ரயில்நிலையத்தில் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெருச்சோடி காணப்படுகிறது. இதனால் இந்த ரயில் நிலையத்தை நம்பியிருந்த நூற்றுகணக்கான டாக்சி ஓட்டுனர்கள், வியாபாரிகள், மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருவதுடன், இந்த பகுதியில் உள்ள பெரும்பாலோனர் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து சுற்றுலா பயணிகள் வழிகாட்டியும் சமூக ஆர்வளருமான சுந்தர்ராஜன் கூறுகையில், இந்திய அளவில் குறிப்பிட்ட "ஏ"கிரேடு ரயில் நிலையங்களில் ஒன்று கொடைரோடு ரயில் நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் கேரளா உட்பட தென் பகுதிக்கும், வட மாநிலங்களுக்கும் செல்லும் முக்கிய வழித்தடத்தில் பல்வேறு அம்சங்களுடன் நான்கு நடைமேடைகளுடன் நீண்டு அகண்ட அனைத்து வசதிகளுடன் உள்ள இரயில்நிலையத்தில், கொரானா காலத்திற்கு முன் தேஜஸ், குருவாயூர், நெல்லை, முத்துநகர், பொதிகை, ஹவுரா கொல்லம் மற்றும் சிறப்பு ரயில்கள் உட்பட 16 முதல் 22 இரயில்கள் வரை நிறுத்தபட்டன.
இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் காஃபி, ஏலம் மற்றும் பழங்கள், பூக்களை வெளி நாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வதுடன் வடமாநில, வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வியாபாரிகள் பொதுமக்கள் என எப்போதும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த ரயில்நிலையத்தில் முன்பு நின்று சென்ற பெரும்பாலான ரயில்கள், இப்போது நிற்காமல் செல்வதுடன், வெறும் மூன்று ரயில்கள் மட்டுமே இந்த கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்வதால், சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி காணப்படுகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த டாக்ஸி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கடனில் மூழ்கியுள்ளனர். பயனாளிகள், வணிகர்கள் விவசாயிகள் என மறைமுகமாக பயனடைந்து வந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் போதிய வருவாய் இன்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து கொடைக்கானல் ரோடு ரயில் பயணிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் சங்கம் சார்பில் தென்னக ரயில்வே மதுரை மண்டல நிர்வாக அதிகாரி மற்றும் தென்னக ரயில்வே புது மேலாளர் உட்பட பலரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ரயில்வே நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தும், மதுரை மண்டல ரயில்வே அதிகாரிகள், ஒன்றிய ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுடன் பாரம்பரியமிக்க ரயில் நிலையத்தை மூடும் நோக்கில் செயல்படுவதாகவும், ஏற்கனவே நின்று சென்ற ரயில்களை மீண்டும் நிறுத்த வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து இதே போக்கினை கடைப்பிடித்தால் விரைவில் பொதுமக்கள், வணிகர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Kodaikanal, Local News