கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயச்சந்திர ராஜா தமிழ்நாடு அரசு நியாய விலை கடை ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 5ம் தேதி காலை மெய் காவல் தெரு வழியாக சென்ற ஜெயச்சந்திர ராஜாவை மர்ம நபர்கள் வழி மறைத்து அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ஜெயச்சந்திர ராஜா கைவிரல்கள் துண்டானது. மேலும் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜெயச்சந்திர ராஜா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்து அந்த கும்பல் தப்பி சென்றது. ஆனால் உயிர் பிழைத்த ஜெயச்சந்திர ராஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களில் அரிவாள் வெட்டில் ஈடுபட்டவர்கள் பைக்கில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதை வைத்து சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி, நாச்சியார்கோவிலை சேர்ந்த பிரவீன்குமார், திருவிடைமருதூர் முகமதுயாசின், மன்னார்குடியை சேர்ந்த முகமது யுனிஸ் என்கிற அப்பாஸ், நாச்சியார்கோவில் குருமூர்த்தி, கும்பகோணம் அசோக்குமார், திருச்சி செம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், கும்பகோணம் சுந்தரபெருமாள் கோவில் வழக்கறிஞர் ஆனந்தன் என 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் பணம் கொடுத்து ஜெயச்சந்திர ராஜாவை வெட்ட சொன்னது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டுறவு அமைச்சர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருக்கும், சிதம்பரம் நாச்சியார் கோவிலை சேர்ந்த ரகுவுக்கும், ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் ஜெயச்சந்திர ராஜாவுக்கும் ஏற்கனவே பழக்கம் உள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக ரகு தெரிவித்ததின்பேரில், பலரிடம் பணம் வசூலித்து கொடுத்து இருக்கிறார் ஜெயச்சந்திர ராஜா. ஆனால் பணத்தை வாங்கிய ரகு, தான் சொல்லியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் ஜெயச்சந்திர ராஜாவுக்கு நெருக்கடி கொடுக்க, அவர் ரகுவிடம் கேட்டிருக்கிறார். வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ரகு ஏமாற்றி இருக்கிறார்.
இதனால் ஜெயச்சந்திர ராஜா பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி ரகுவிடம் வாக்குவாதம் செய்ய இருவருக்கும் இடையே பகை வளர்ந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரகு, கூலிப்படையை ஏவி ஜெயச்சந்திர ராஜாவை கொலை செய்ய முயன்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கூலிப்படையை சேர்ந்த 12 பேரில் 7 பேர் கைதாகியுள்ள நிலையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், தலைமைச் செயலக பணியாளர் ரகு தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cuddalore, Local News