கோயம்புத்தூர் மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை மட்டுமே துப்பறியும் நாய்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தற்போது 9 மோப்ப நாய்கள் உள்ளன. இதில் சிந்து என்ற நாய் பணி ஓய்வு பெற்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை மாநகரில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்தால், அப்பகுதிக்கு மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டு, துப்பறியும் பணியை போலீசார் மேற்கொள்கிறார்கள்.
மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற பணிகளிலும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் 14 போலீசாருடன் இந்த பிரிவு இயங்குகி வருகிறது. இந்த பிரிவு தொடங்கப்பட்ட காலம் முதல் ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய பொள்ளாச்சியை சேர்ந்த கவிப்பிரியா மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பவானி ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி எப்படி அளிப்பது? அவற்றுடன் பழகுவது எப்படி? உணவு எப்படி வழங்க வேண்டும்? என்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே துப்பறியும் நாய்படை பிரிவில் முதல் பெண்களாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் இவர்கள், இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழக காவல்துறைக்கு மேலும் பெருமை சேர்ப்போம் என்று மிடுக்காக கூறுகின்றனர்.
இதுகுறித்து கவிப்பிரியா கூறியதாவது, “நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு. கோவையில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது மோப்ப நாய்களை கொண்டு சோதனை செய்வதை பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் பார்த்து உள்ளோம்.
அப்போது நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மோப்ப நாய் பிரிவில் சேர வேண்டும் என்று எண்ணினோம். இதற்கிடையே தான் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என்று கூறியிருந்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறினோம். அதன்படி தற்போது மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு அதிகாரிகளின் சொல்லுக்கு கீழ்ப்படிதல், போதை பொருட்களை கண்டறிவது, கொலை, கொள்ளை சம்பவங்களில் துரத்திச்சென்று மோப்பம் பிடிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது”
என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News