ரயில்வே துறையில் அதிகரித்து வரும் கோவைக்கான தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக ரயில்வே துறைக்கு அதிகப்படியான வருவாயை கோவை மாவட்டம் தருகிறது. இதனிடையே தொழில் நகரான கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், இந்தியா முழுவதற்கும் அதிக அளவில் ரயில்களை இயக்கினால் கோவையில் தொழில் வளம் பெருகும் என்பது தொழில் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே ரயில்வே போராட்டக் குழு மற்றும் அனைத்து கட்சிகள் இது தொடர்பான கூட்டம் நடத்தியுள்ளன. மேலும், தங்களது கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறியதாவது:
ரயில்வே போராட்டக் குழுவை கோவை மாவட்டத்தில் துவங்கி, அனைவரும் சேர்ந்து குரல் எழுப்பியதால் தான் ரயில்வே துறையில் பல பணிகள் நடைபெற்றுள்ளன. சேலம் கோட்டம் ஒரே நாளில் வரவில்லை. தொடர்ச்சியான போராட்டத்தால் கிடைத்தது.
இதையும் படிங்க: கோவையில் சில்லென்று கொட்டும் அழகிய அருவிகள்... இவை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!
இங்கு ரயில்வே இரட்டை பாதை அமைக்கும் பணிகள் நடக்கும் காலகட்டத்தில் 13 ரயில்கள் இருகூரில் இருந்து போத்தனூர் வழியாக இயக்கப்பட்டன. ஆனால் பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் ரயில்கள் திருப்பிவிடப்படவில்லை.
தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக 8 ரயில்கள் கோவை வழியாக திருப்பப்பட்டன. வாளையாறில் யானைகள் ரயிலில் மோதி விபத்து நடக்கிறது. இதில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தால் பொறியாளர்களை அழைத்து சோதனை செய்யவும், குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் போது குறைவான வேகத்தில் ரயிலை இயக்க வேண்டும், அதற்காக ரயிலை ரத்து செய்யக்கூடாது என்று கடிதம் எழுதியுள்ளேன்.
கடந்த காலத்தை விட இந்த போராட்டக்குழு முகம் தெரியாத மக்களுக்காக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையங்கள் சேலம் கோட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தென் மாவட்டங்களை இணைக்கும் கடந்த காலங்களில் இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மங்களூர்-பாலக்காடு இண்டர்சிட்டி திட்டம் மேட்டுப்பாளையம் வரை நீட்டித்து அமல்படுத்தப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்கிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றி அந்த பகுதிகளில் நிறுத்துவதில்லை. ரயில்களை அங்கு நிறுத்த வேண்டும். கோவை புறக்கணிக்கப்படக் கூடாது.
ரயில்வே துறைக்கு தமிழகத்தில் இரண்டாவது அதிக வருவாய் கொடுக்கும் கோவையை தனி கோட்டமாக அறிவிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News