கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் 220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி நாளை (புதன் அன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி களி மண்ணால் ஆன சிலைகளை தயாரித்து மண்பாண்ட தொழிலாளர்கள் விற்பனை செய்துள்ளனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் இந்து முன்னணியினர் திருப்பூரில் இருந்து சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்ய தயார் நிலையில் வைத்து உள்ளனர். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொது மக்கள் வழிபாடு செய்ய போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் கட்டுப்பாடுகளை விதித்தும் உள்ளனர்.
பொள்ளாச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட பகுதிகளில் 220 சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பு வைக்கப்பட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி, கெமிக்கல் வண்ண கலவைகள் பூசிய சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கூடாது. சிலைகளின் பாதுகாப்பிற்கு அதன் அமைப்பாளர்களே முழுபொறுப்பு ஆவார்கள்.
சிலைகள் வைக்கப்படும் இடத்திலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும் லைட் வசதி ஏற்படுத்தி போதுமான வெளிச்சம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தீ விபத்துகளை தடுக்க சிலை வைக்கப்படும் இடங்களில் வாளியில் மணல், தண்ணீர் நிரப்பி வைத்திருக்க வேண்டும்.
சிலை வைக்கப்படும் இடத்திற்கு அருகில் கார், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்றவற்றை நிறுத்த கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
ஒவ்வொரு சிலையும் வைக்கப்படும் நாளில் இருந்து அந்த சிலைக்கு 5 பேரை பாதுகாவலராக நியமிக்க வேண்டும். சிமெண்டு சீட், துத்தநாகத்தகடு போன்றவற்றால் மட்டுமே பந்தல் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News