முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / வீரப்பன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள்... கோவையில் மக்களைக் கவர்ந்த அருங்காட்சியகம்

வீரப்பன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள்... கோவையில் மக்களைக் கவர்ந்த அருங்காட்சியகம்

கோவை  காவல்துறை அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டுள்ள வீரப்பன் துப்பாக்கிகள்

கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வீரப்பன் துப்பாக்கிகள்

வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள், தமிழீழப் போராளிகள் பயன்படுத்திய சிறிய ரக ஏவுகணைகள் முதல் பல்வேறு ஆயுதங்கள் கோவையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

  • Last Updated :
  • Coimbatore, India

வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள், தமிழீழப் போராளிகள் பயன்படுத்திய சிறிய ரக ஏவுகணைகள் முதல் பல்வேறு ஆயுதங்கள் கோவையில் உள்ளன.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள், தமிழீழ போராளிகள் பயன்படுத்திய சிறிய ரக ஏவுகணைகள் முதல் பல்வேறு வகையான ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோவை ரயில் நிலையம் எதிரே 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் கோவை மாவட்டத்தில் 1918 ஆம் ஆண்டு ஹேமில்டன் என்ற காவல் கண்காணிப்பாளரால் கட்டப்பட்டு ஹேமில்டன் காவலர் கூட்டுறவு விடுதி சங்கமாக செயல்பட்டது. பின்னர் பாழடைந்த நிலையில் இருந்து இந்த கட்டிடம் 2016 ஆம் ஆண்டில் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.

காவல்துறையின் வரலாற்று சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகமாக உள்ள இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், நவீன எந்திரங்கள், வெடி பொருட்கள், சிறு பீரங்கிகள், புல்லட்டுகள் என பல வகையான பொருட்கள் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழக கர்நாடக காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரப்பன் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இதில் ஏகே 47 ரீபில் என்ற இரண்டு துப்பாக்கியும், செல்ஃப் லோடிங் ரீஃபுல், போர் செமி ஆட்டோமேட்டிக் வெப்பன் போன்ற பல ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல எஸ்.பி.எம்.எல் துப்பாக்கி நான்கும் இங்கு உள்ளது. அது மட்டுமல்லாமல் 1964 ஆம் ஆண்டு மலையூர் மம்பட்டியானிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் கத்திகள், ரிவால்வர்கள், பிஸ்டல் ஆகியவையும் உள்ளன.

மேலும் 1992 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆறு வகையான துப்பாக்கிகளும், கூர்மையான பல கத்திகளும், வாக்கி டாக்கி, மெஷின்கன்கள், பிஸ்டல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. அதேபோல  தமிழ் போராளிகள் பயன்படுத்திய தமிழக காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 81 மில்லி மீட்டர் ராக்கெட் ஏவுகணையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் போராளிகள் கை துப்பாக்கி உள்ளிட்ட எந்திரங்களை தயாரிக்க பயன்படுத்திய லேத் எந்திரங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்படி காவல்துறையால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மட்டுமல்லாமல் தமிழக காவல்துறையின் சாதனைக்குரிய நவீன பொருட்களும், பழமையான துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக நில கண்ணிவெடிகள், கண்ணிவெடி மற்றும் வெடி மருந்து வாசனையை கண்டுபிடிக்கும் கருவிகள், மண்ணுக்குள் புதைந்திருக்கும் வெடி மற்றும் உலோகப் பொருட்களை கண்டுபிடிக்கும் கருவிகள், மேலும் வெடிகுண்டை கண்டறிதல் மட்டுமல்லாமல் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட கருவிகளும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல தற்போதைய காவல்துறை, துணை ராணுவம் போன்ற பல்வேறு உடைகள் அணிந்த பொம்மைகள் மட்டுமல்லாமல், 1862 ஆம் ஆண்டில் காவலர் சீருடை, 1920 ஆம் ஆண்டில் இந்தியாவில் பணியாற்றிய ஆங்கிலேய காவல் அதிகாரியின் சீருடை, 1930 ஆம் ஆண்டில் காவல் அதிகாரியின் சீருடை, 1940 ஆம் ஆண்டில் காவல் அதிகாரியின் சீருடை, 1970 ஆம் ஆண்டில் காவலர் சீருடை ஆகியவை உருவ பொம்மைகளில் பிரத்தியேகமாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறையின் நவீன புலனாய்வு உபகரணங்கள், 1964 ஆம் ஆண்டில் கையாளப்பட்ட குற்றவாளிகளின் ஆவணங்களான நெகட்டிவ் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. காவல்துறையின் புகைப்படத்துறை சார்பில் 19 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அரிய புகைப்படகருவிகளான உட்டன் பீல்ட் கேமரா இங்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1959 ஆம் ஆண்டு பிரபல கோவை கள்ள நோட்டு வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அச்சு இயந்திரங்கள், அச்சு கட்டைகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இந்த அச்சு கட்டையில் ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய், 100 ரூ ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

தமிழக காவல்துறையின் துப்பாக்கியை பொருத்தவரைக்கும் பழமையான சுழல் துப்பாக்கிகள், கை துப்பாக்கிகள், கைப்பெட்டி எந்திர துப்பாக்கிகள், கார்பைன் துப்பாக்கிகள், சிக்னல் கைத்துப்பாக்கிகள், ஏகே 47, தானியங்கி துப்பாக்கிகள் என 35 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் இங்கு உள்ளது. இப்படி அருங்காட்சியகத்தின் உட்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பல வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில்1809 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இரும்பு பீரங்கியும், அதேபோல கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்திய வெடி மருந்து குடுவை கவண்கள்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனால் வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த நீர் மூழ்கி கப்பல், ரோந்து படகும் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை rz 13 யும்போபஸ் பீரங்கி மூலம் பயன்படுத்தும் வெடி மருந்து குண்டுகளும், இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளும், சிறிய ரக விமானமும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இதனை பார்க்க வரும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

top videos

    செய்தியாளர் : ஜெரால்டு, கோயம்புத்தூர்.

    First published:

    Tags: Coimbatore, Local News, Sandalwood veerappan