ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தைப் பெற்ற கோவை மாநகரில் மேம்பாலங்கள் அமைத்தல், சாலைகளில் எல்இடி விளக்குகள் பொருத்துதல், மாடல் சாலைகள் அமைத்து சர்வதேச தரத்தில் நகரை உருவாக்குதல் மற்றும் குளக்கரைகளை மேம்படுத்துதல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு பக்கம் கோவையை அழகாக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் மறுபக்கம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ளது மசல் லே-அவுட். இங்கு சுமார் 200 குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த மசால் லே-அவுட் பகுதியில், சாலை வசதி, மின்விளக்கு வசதி கழிப்பறை வசதி என எவ்வித அடிப்படை தேவைகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இந்த 200 வீடுகளில் வசிக்கும் பொதுமக்களும் அங்கு உள்ள பொது கழிவறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த கழிவறையும் முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மசால் லே அவுட் பகுதியில் செல்லும் கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கான்கிரீட் தளம் ஆங்காங்கே உடைந்திருப்பதால், அவ்வழியாக செல்பவர்களும், விளையாடும் குழந்தைகளும் சாக்கடைக்குள் விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரம் என்றால் எங்கு கிடைக்கும் என்பதை போல், வீதியெங்கும் குப்பைக்கழவுகள் குவிந்து கிடக்கின்றன.
தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இந்த பகுதி தூய்மையே இல்லாமல் நோய் பரப்பும் கூடம் போல் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக மசால் லே-அவுட் இந்த நிலையிலேயே இருப்பதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமுறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
கோவையை அழகாக்கும் முன் மக்களின் அடிப்படைத் தேவைகளை இந்த அரசு பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.