கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளும் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர்.
கோவை மாவட்டத்தில் 193 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும், 465 தனியாா் பள்ளிகளும் உள்ளன. இவை தவிர ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தோ்வு முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் துவங்கியது.

பள்ளிகள் திறப்பு
கோவை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி முன்கூட்டியே பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து இன்று காலை பள்ளி நேரத்திற்கு சுமார் 1 மணி நேரம் முன்னதாகவே மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், மாணவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வந்தனர்.

மாணவர்கள் உற்சாகம்
பள்ளிகளில் முதல் வாரத்தில் மாணவர்களுக்கான புத்துணர்வு பயிற்சி, நல்லொழுக்கம், உளவியல் ரீதியான வகுப்புகள் மட்டும் நடத்தப்பட உள்ளன. அடுத்த வாரத்திலிருந்து வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.