முகப்பு /கோயம்புத்தூர் /

சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை.. கோவையில் ரவுடிகளை களையெடுக்கும் போலீசார்..

சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை.. கோவையில் ரவுடிகளை களையெடுக்கும் போலீசார்..

X
கோவையில்

கோவையில் ரவுடிகளை களையெடுக்கும் போலீசார்

Coimbatore News : கோவை மாநகரில் நடந்த தொடர் கொலை சம்பவங்களை தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை களையெடுக்க பட்டியல் தயாரித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகரில் கடந்த வாரம் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கோவை மிகுந்த பதற்றத்துடனேயே காணப்படுகிறது. அதிலும் ஒரு கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியில் மதுரையை சேர்ந்த சத்தியா பாண்டி என்பவரை 5 பேர் கும்பல் அரிவாள், துப்பாக்கியுடன் ஒட, ஒட விரட்டி கொலை செய்தனர். இதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகிலேயே கோகுல் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. முன்னதாகவே நடந்த கொலை சம்பவத்திற்காக பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டது. கோவை மாநகரில் சினிமா பாணியில் ரவுடிகள் கும்பலாக பிரிந்து மோதுவது தொடர் கதையாகி வருகிறது.

ஒரு கும்பலை சேர்ந்தவர்கள், எதிர் கும்பலை சேர்ந்தவர்களை வெட்டுவதும், பதிலுக்கு அவர்கள் வெட்டுவதும் என சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக கண்ணப்ப நகர், மோர் மார்க்கெட், ரத்தினபுரி, சித்தாபுதூர், செல்வபுரம், சரவணம்பட்டி பகுதிகளில் அதிகளவில் ரவுடி கும்பல் உள்ளது. இவர்கள் வாகனம் பறிமுதல், கஞ்சா விற்பனை, ரியல் எஸ்டேட் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த தொழில் போட்டியில் தான் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வார்கள்.

இதுதவிர ஆங்காங்கே சில கத்திக்குத்து சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களும் நடந்து வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவில் நடந்து வந்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, மக்கள் நிறைந்த இடத்தில் கொலை செய்வது என வன்முறை சம்பவம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதையடுத்து போலீசார் கோவை மாநகர் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த பகுதி போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலை சேகரித்து வருகின்றனர்.

இதில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் சம்பந்தப்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து, அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே கோவை மாநகரில் தெற்கு பகுதியில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 வீடுகளில் சோதனை நடத்தி 19 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து கத்தி, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வடக்கு பகுதியில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்றும், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News