பொதுவாக பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு அனைத்து சவுகரியங்களும் கிடைக்கும். ஆனால், ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களைப் போல் அமைதியான சூழல் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒலி... ஒலியைக் கேட்க முடியாத வாழ்வியல் பயணம் என்பது சிரமமான காரியம். இங்கு ஒலி பிரச்சனையல்ல. ஒலி சத்தமாக மாறுவது தான் பிரச்சனை..
இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின் படி நகரப் பகுதிகளில் பகல் நேரத்தில் 55 டெசிபல் மற்றும் இரவு நேரத்தில் 45 டெசிபல் இருக்க வேண்டும் என்பது விதி. உலக சுகாதார ஆய்வு நிறுவனத்தின் பரிந்துரைப்படி 65 டெசிபல்-க்கு மேல் ஒலி அளவு இருக்கக்கூடாது.
ஆனால், நிலைமை அப்படி இருக்கவில்லை. எங்கும் இரைச்சல். இந்த ஒலி மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பது வாகன போக்குவரத்து.

கோவை நகர்..
கடந்த 2018ம் ஆண்டின் தரவுகள் இந்தியாவின் 6 பெருநகரங்கள் பட்டியலில் ஒலி மாசு அதிகமுள்ள இடமாக சென்னை உள்ளதாக அறியப்படுகிறது. இங்கு ஒலி மாசுபாடு அளவு சராசரியாக 67.8 டெசிபல் பாதிவாகியிருந்தது. கோவையில் எந்த அளவு ஒலி மாசுபாடு உள்ளது என்பதை, ஒலி மாசுபாட்டை அறியும் செயலி மூலம் பரிசோதனை செய்த போது நமக்கு கிடைத்த தரவுகளின்படி கோவையின் வெவ்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் 70 முதல் 90 டெசிபல் அளவில் ஒலி உள்ளது என்பதாக உள்ளது. ஒலி மாசுபாடு கோவையில் அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
ஒலி மாசுபாடு அதிகரிப்பால் மன அழுத்தமும், இதய நோய்களும், குழந்தைகளின் கற்றல் திறனும் பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படுகிறது. ஒலி மாசுபாடு 10 டெசிபல் அதிகரித்தால் உற்பத்தியில் 5 சதவீதம் குறைவதாக கென்யாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கோவை மாநகர் பகுதி..
தமிழக உற்பத்தி கூடாரமாக திகழும் கோவையில் ஒலி மாசுபாடு அதிகரிப்பது மக்களுக்கும் உகந்ததல்ல, தொழிலுக்கும் உகந்ததல்ல. தேவையில்லாமல் வாகனங்களில் ஒலி எழுப்புவதை தவிர்ப்பதும், அதிக ஒலி எழுப்பும் வகையிலான சைலன்சர்களை தவிர்ப்பதும், வெகுஜனங்களாகிய நமது பணி.
ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், மற்ற பகுதிகளையும் கண்காணித்து முறைப்படுத்துவது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பணி. அனைவரும் தங்கள் சமூக கடமையை செய்தால் மனித குலத்திற்கு புதிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.