கோவை - திருச்சி சாலை 4 வழிச்சாலையாக இருப்பதால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக அரசு மருத்துவமனை, சுங்கம், ராமநாதபுரம் சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
எனவே இந்த கோவை-திருச்சி சாலையையும், அவினாசி சாலையைப் போல் 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இதனிடையே திருச்சி சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியிலிருந்து அல்வேர்னியா பள்ளி வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.253 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு இந்த மேம்பாலப் பணிகளை கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் லிட், ஹைதராபாத் என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு பணி ஒப்படைப்பு செய்யப்பட்டது. பணியின் ஒப்பந்த காலம் 24 மாதங்கள் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஒப்புதல் பெறப்பட்ட சில மாதங்களிலேயே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.
மேம்பால கட்டுமானத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், திறப்பு விழா காணமுடியாமல் இருந்தது. இதனால் இந்த பாலத்தையும், கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே இரண்டு மேம்பாலங்களும் இன்று திறக்கப்பட்டன.
திருச்சி சாலையில் அமைந்துள்ள புதிய மேம்பாலம் மூலமாக சிங்காநல்லூரிலிருந்து அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், நகர் மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல முடியும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயன் பெற உள்ளனர். இந்த மேம்பாலத்தில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சென்டர் மீடியன் கற்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல் இரும்பு தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.
தரமான தார் சாலைகள், மேம்பாலத்தின் சுற்றுச் சுவர்களில் கண்ணைக் கவரும் வண்ணங்கள், மேம்பால தூண்களில் தேச தலைவர்களின் புகைப்படங்கள் என கோவையிலுள்ள மேம்பாலங்களிலேயே சிறந்த மேம்பாலமாக திருச்சி சாலை மேம்பாலம் அமைந்துள்ளது.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.