கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 23 புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 கல்லூரிகளும், 40 ஆராய்ச்சி நிலையங்களும், 15 வேளாண் அறிவியல் நிலையங்களும் இயங்கி வருகிறது. இந்த நிலையங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வனப்பயிர்கள் என 23 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் புதிய ரகங்கள் வெளியிட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 புதிய தொழில்நுட்பங்களும், 6 புதிய பண்ணை இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த 23 ரகங்களில் 4 புதிய நெல் ரகங்கள் உட்பட 16 வேளாண் பயிர் ரகங்கள் உள்ளன. இவை தவிர சர்வதேச சிறுதானிய பயிர்கள் ஆண்டாக கொண்டாடப்படும் இவ்வருடத்தில் சிறுதானிய பயிர்களின் சாகுபடியினை ஊக்குவிக்கவும் அதனை உட்கொள்ளும் அளவினை அதிகரிக்கும் பொருட்டும், 4 புதிய சிறுதானிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் பயறு வகைகளில் 3 ரகங்களும், எண்ணெய் வித்து பயிர்களில் 2 ரகங்களும், மக்காச்சோளம் கரும்பு மற்றும் பசுந்தால் உர பயிரான சணப்பையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பீர்க்கை மற்றும் குத்து அவரையில் தலா ஒரு ரகமும், மலர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் மார்கழி மல்லி என்ற மலர் ரகமும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மானாவரி மற்றும் தரிசு நிலங்களில் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கோடு வன பயிர்களில் சுமார் 4 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயிர் ரகங்களையும் மற்றும் தொழில் நுட்பங்களையும் விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் சாகுபடியினை அதிகரிக்க வேண்டும் என வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Coimbatore, Local News