தமிழகத்தின் தொழில்துறை தலை நகரமாக விளங்கி வருகிறது கோவை மாவட்டம். இங்கு விவசாயம் மற்றும் ஜவுளித்துறைக்கு அடுத்தபடியாக மோட்டார் பம்ப்செட் உற்பத்தி, வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் உதிரி பாகங்கள் உற்பத்தி, வெட்கிரைண்டர் உற்பத்தி ஆகிய தொழில்கள் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறு குறு தொழில்கள் மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் இந்த தொழிலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இதன் தாக்கத்திலிருந்து தொழில் முனைவோர் மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில் மூலப்பொருட்களின் பல மடங்கு விலை உயர்வால் தொழில் ஸ்தம்பித்து வருகிறது.
மேலும் படிக்க: உலகத்தரம்மிக்க கோவையின் ELGi நிறுவனத்தில் எவ்வாறு பணிக்கு சேரலாம்?
உற்பத்தி தொழில் துறையில் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக தாறுமாறாக அதிகரித்தது. இதனால் குறுந்தொழில் முனைவோர் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். சிறு குறு தொழில்முனைவோர் பெரும்பாலும் பெரு நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஆர்டர்கள் பெற்று பணியாற்றுகின்றனர். ஏற்கனவே ஜிஎஸ்டி நடைமுறை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள், தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: இன்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் கருவியை மலிவு விலையில் உருவாக்கி அசத்திய கல்லூரி மாணவன் - எங்கு வாங்கலாம்?
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் தொழிலை கைவிட்டு சென்று விட்டனர். இதில் ஒரு சிலர் வேறு நிறுவனங்களில் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இப்படியே சென்றால் தமிழகத்தில் தொழில்களின் தலைநகராக உள்ள கோவை தனது அடையாளத்தை இழப்பதோடு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் தொழில் முனைவோர்.
ஏற்கனவே தொழிலாளர்கள் பலரும் உற்பத்தித் துறையில் இருந்து சேவைத் துறையை நோக்கி நகர்வதால் தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களையும், தொழில் முனைவோரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழில் முனைவோர் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.