Home /coimbatore /

கோவையில் தொழில்முனைவோராக சாதிக்கும் திருநங்கை...! வேலைவாய்ப்பு தந்து வாழ்வாதாரமும் அளிக்கிறார்

கோவையில் தொழில்முனைவோராக சாதிக்கும் திருநங்கை...! வேலைவாய்ப்பு தந்து வாழ்வாதாரமும் அளிக்கிறார்

திருநங்கை

திருநங்கை தஸ்லீமா நஸ்ரின்

Transgender Taslima Nazrin : "எங்களுக்கு தான் வேலை கொடுக்கல.. நான் கொடுக்கிறேன்" - தொழில் நிறுவனம் தொடங்கி நடத்தி வரும் கோவை திருநங்கை தஸ்லீமா நஸ்ரின் நெகிழ்ச்சி..!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவையில் வீட்டு சுத்திகரிப்பு பொருட்கள் தொழில் தொடங்கிய திருநங்கை ஒருவர் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

திருநங்கை என்ற சமூகத்திற்கான ஆதரவு என்பது நமது சமுதாயத்தில் குறைவாகவே உள்ளது. சரியான வேலைவாய்ப்பு கிடைக்காத காரணத்தால் திருநங்கைகள் சிலர் யாசகம் பெற்றும், சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டும் வாழ்வை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

திருநங்கைகளின் வாழ்வை முன்னேற்ற அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் சமுதாயத்தின் முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதால் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளது.

இந்த சூழலில் கோவையை சேர்ந்த திருநங்கை தஸ்லீமா நஸ்ரின் தொழில் ஒன்றை தொடங்கி அதில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் என 20 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். பாலின பாகுபாட்டை ஒழிக்க அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வழங்க ஆசைப்படுவதாகவும் தஸ்லீமா நஸ்ரின் தெரிவிக்கிறார்.

தஸ்லீமா நஸ்ரின்


இதுகுறித்து தஸ்லீமா நஸ்ரின் கூறியதாவது:

நான் ஒரு திருநங்கை என்று கூறுவதற்கு பெருமைப்படுகிறேன். ஒரு திருநங்கையாக இருந்ததால் தான் இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது. இதுவரை ஏழை பள்ளி மாணவர்களுக்கு உதவுதல், திருநங்கைகளுக்கு உதவுதல், கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் ஆதரவற்றவர்களை பராமரித்தல் என சமூக ஆர்வலராக பலருக்கு உதவி வந்தேன்.

தஸ்லீமா நஸ்ரின்


ஆனால் திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு என்பது குறைவாக இருந்தது. இதனால் நாமே ஒரு தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து ப்ரியம் ஹோம் ப்ரோடெக்ட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இதில் வீட்டை சுத்தம் செய்வதற்கான கிருமி நாசினிகள், துணி துவக்கும் பவுடர், பினாயில் உள்ளிட்ட சுத்திகரிப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம்.

தஸ்லீமா நஸ்ரின் நடத்தி வரும் நிறுவனம்


திருநங்கைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 20 பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். பாலின பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக அனைவருக்கும் சம வாய்ப்பளித்து இந்த நிறுவனத்தை நடத்துகிறேன். ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.

நான் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திருநங்கையான பிறகு கையேந்தும் நிலைக்கு வந்தேன். பாலினத்தை மட்டும் காட்டி என்னை சமூகம் புறக்கணித்ததால் தான் இந்த நிலை. இந்த பாகுபாடுகளை களைய இது எனது முயற்சி. திருநங்கை என்பதற்காக எனது பொருளை வாங்க வேண்டாம். ஒரு முறை எங்கள் தயாரிப்புகளை உபயோகித்து பார்த்துவிட்டு எங்கள் பொருட்களை வாங்கலாம். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தஸ்லீமா நஸ்ரின் மற்றும் அவரது குழுவினர் தயாரிக்கும் ப்ரியம் ஹோம் ப்ரோடெக்டுகளை வாங்க வேண்டும் என்றால் 9787345432 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கலாம்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி