கோவை மாநகர காவல் துறையில் பெண் காவல் ஆய்வாளர் தனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி மனரீதியாக டார்ச்சர் செய்வதால், காவல் துறையில் தனது வேலையை ராஜினாமா செய்யப் போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர் கோவைக்கு கடந்த 2020 ம் ஆண்டு மாற்றப்பட்டார். கோவை மாநகர காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் திருநங்கை காவலர் நஸ்ரியா இன்று ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரியா, காவல்துறையில் பணியில் சேர்ந்ததில் இருந்து , பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்பொழுது தங்களது பிரிவில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை என்பவர் தனது பாலினம் குறித்தும், ஜாதி குறித்தும் இழிவாக பேசுவதாகவும், மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் தன்னால் இனி காவல்துறையில் பணியில் இருக்க முடியாது என தெரிவித்த திருநங்கை காவலர் நஸ் ரீயா தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், அந்த கடிதத்தை கொடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் நஸ்ரியாவை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அப்போது திருநங்கை காவலர் நஸ் ரீயா சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு , புகாரை எழுத்து பூர்வமாக கொடுக்கும் படி அறிவுறுத்தினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனையடுத்து திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா எழுத்து பூர்வமான புகார் அளித்தார். இதனிடையே திருநங்கை காவலர் நஸ்ரியா அளித்துள்ள புகார் குறித்து துணை ஆணையர் சந்தீப் விசாரிப்பார் எனவும், ஏற்கனவே திருநங்கை காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும் அவர் தற்போது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Transgender