கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த தினக்கூலியை வழங்க வலியுறுத்தியும், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவால் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் பணி பாதுகாப்பில்லாத சூழல் நிலவும் எனவும் எழுந்த புகாரின் பேரில் தூய்மை பணியாளர்கள் நேற்று காலை 8 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பத்து மணி நேரமாக போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து தொழிலாளர் நல துறை அலுவலகத்தில் நேற்று மதியம் 3;30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
10 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள்,கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரதாப் வாசுதேவ கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் தொழிலாளர் உதவி ஆணையர் பிரேமா தலைமையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர் .
முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து பின்னர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கோயமுத்தூர் தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி தலைமையில் இருதரப்பினரிடம் நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் பொதுநலன் மற்றும் தொழிலாளர் நலன் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில்கொண்டு இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பில் குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களை தவிர,ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களை புதியதாக ஒப்பந்தம் எடுக்கும். நிறுவனத்தில் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும், அத்துடன் பணிப்பாதுகாப்புடன் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிர்வாகம் எடுக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டால் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore