கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இளங்கலை படிப்புக்கான உடனடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இளங்கலை படிப்புக்கான உடனடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 24ஆம் தேதி நடக்கிறது. இது குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் 1,105 இடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 24ஆம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பும் மாணவர்கள் குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கை இணைப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். உறுப்புக் கல்லூரிகளுக்கு பொருந்தாது.
உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைத்த மாணவர்களிடம் இருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும். உடனடி மாணவர் சேர்க்கைக்கு நகர்வு முறை கிடையாது. பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து கலந்தாய்வை தவறவிட்டவர்கள் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களும் கலந்து கொள்ளலாம். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளும் மாணவர்கள், கல்லூரியை தேர்வு செய்வதற்கு முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை. இடம் கிடைத்த எஸ்.சி., எஸ்.டி.ஏ. எஸ்.டி. பிரிவினர் ரூ.1500, இதர பிரிவினர் ரூ.3,000 செலுத்த வேண்டும்.
இணைப்பு கல்லூரிகளில் ஆண்டு கட்டணம் உணவு, தங்குமிட கட்டணம் நீங்கலாக ரூ.40,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வளாகத்திற்கு வரவேண்டும். அவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும். கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை காலியிடங்கள் திரையில் தெரிவிக்கப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தரவரிசை அடிப்படையில், மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப்படிப்பை தேர்வு செய்ய அழைக்கப்படுவார்கள். இடம் கிடைத்த மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு கட்டணத்தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம்.
அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டவுடன், காத்திருப்பு பட்டியல் உருவாக்கப்படும். உடனடி மாணவர் சேர்க்கை நடைபெற்ற, ஒரு வாரத்திற்கு பிறகு காலியிடங்கள் ஏதேனும் இருந்தால் மீண்டும் ஒரு உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது.
கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிய ugadmissions@tnau.ac.in என்ற இ-மெயில் முகவரியை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News