சென்னையை சேர்ந்தவர் ராஜேந்திரன் மணி. கடந்த 35 ஆண்டுகளாக பாடி பில்டிங் துறையில் தனது காலடித்தடத்தை ஆழப்பதித்தவர் இவர். மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும், பட்டங்களையும் வென்றுள்ளார். தற்போது 50 வயதை கடந்திருக்கும் ராஜேந்திரன் மணி பாடி பில்டிங் துறையில் இன்னும் வெற்றிகளை குவித்து சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டங்களை பெற்று வருகிறார். இந்த இந்தியாவின் 'ஹல்க்' கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் உடற்பயிற்சி, உணவு முறை குறித்து கேள்வியெழுப்பினோம். "தமிழன் எங்கு சென்றாலும் ஜெயிக்க முடியும்" என்று கம்பீரமான குரலில் தனது அனுபவங்களை பகிர்ந்தார்.
விடா முயற்சி :
இதுகுறித்து அவர் கூறியதாவது, "எனது சொந்த ஊர் சென்னை. எனது 14 வயதில் பாடி பில்டிங் துறைக்குள் வந்தேன். கடந்த 35 ஆண்டுகளாக பாடி பில்டிங் செய்து கொண்டிருக்கிறேன். 30 ஆண்டுகளாக பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளேன். 2013ம் ஆண்டு ஆசிய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. கோவையில் அதற்கான தேர்வு நடைபெற்றது. அப்போதே கூறிச்சென்றேன். தமிழன் நிச்சயம் வெற்றிபெறுவான் என்று. அதேபோல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றேன். இதேபோல் பல பட்டங்களை பெற்றுள்ளேன்.
இந்தியாவில் இருந்து இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியனாக இருப்பது மிகவும் கஷ்டம். நான் விமானப்படையில் பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும்போது நிறைய அரசியல் இருக்கும். அத்தனை தடைகளையும் எதிர்கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.
நாள் முழுதும் உடற்பயிற்சி தேவையா?
நாள் முழுவதும் உடற்பயிற்சியிலேயே இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் செலவழித்தால்போதும் என்பது எனது கருத்து. எனக்கு பாடி பில்டிங் மட்டும் வாழ்க்கையல்ல. அனைவருக்கும் குடும்பம் இருப்பது போல் எனக்கும் குடும்பம் உள்ளது. எனது மகனும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அனைத்தையும் நிர்வகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைப்பது குறித்து?
உடல் எடையை உடனடியாக குறைப்பது தவறு. இது பல வியாதிகளுக்கு வழிவகுக்கும். உடல் எடையை குறைக்க சரியான பயிற்சியாளர் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கையில் அனைத்து உணவுகளும் நமக்கு தேவைப்படுகிறது. சர்வதேச அளவிலான பயிற்சியாளர்கள் இதற்காகவே உள்ளனர். அவர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
புரோட்டின் பவுடர் உட்கொள்வது நல்லதா?
புரோட்டின் பவுடர் எடுத்துக் கொள்வது தவறு இல்லை. 80 கிலோ எடை உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 80 கிராம் புரோட்டின் தேவைப்படும். புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்கள் புரோட்டின் பவுடரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த பவுடரால் மட்டுமே உடல் எடை அதிகரிக்கும் என்பது தவறு. மீன், இறைச்சி, பால், பருப்பு வகைகளும், காய்கறி வகைகளும் எடுத்துக்கொள்ளலாம்” என ராஜேந்திரன் மணி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News