கோவையின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆயிரம் படிகள் ஏறி மலை உச்சிக்குச் சென்று தர்மர் சிவனை வழிபட்டார் என்பது வரலாறு. அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
தர்மர் வழிபட்ட காரணத்தால் இந்த கோயில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலைச் சுற்றி உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தனது பசுமாட்டைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தபோது, மலை உச்சியில் சுயம்புலிங்கத்திற்கு மாடு பால் சொரிந்து கொண்டு இருந்ததாகவும், அதன் பின்னர் தான் இந்த தர்மலிங்கேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1600 அடி உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்து அமைந்துள்ள பெரிய மலைக்கோயில் என்ற சிறப்பையும் இந்த கோவில் பெற்றுள்ளது. ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் இங்கு பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த கிரிவலப் பாதையானது மூன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ளது. இதனால் இந்த கோயில் கோவையின் திருவண்ணாமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 7 மணி பூஜை தொடங்கி 8.30 மணியளவில் தீபாராதனை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சி பூஜையும், மாலை 4.30 மணிக்கு மறு பூஜையும் நடைபெறுகிறது. கோயிலில் தமிழில் மட்டும் பூஜைகள் செய்யப்படுகிறது. தேவாரம் திருவாசகம் பாடி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
பிரதோஷ காலங்களில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பவுர்ணமியின் போது நடைபெறும் வழக்கமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் மேற்கொள்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் இக்கோயிலுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனர். மேலும் மகா சிவராத்திரி தினத்தன்று இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News